50 ஆண்டுகளுக்கு முன் திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் ஏன் நீக்கப்பட்டார் தெரியுமா?

அண்ணா இறக்கும் வரை திமுகவின் உயர் பதவி என்பது பொதுச்செயலாளர் தான்.

50 ஆண்டுகளுக்கு முன் திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் ஏன் நீக்கப்பட்டார் தெரியுமா?

திராவிட முன்னேற்றக் கழக பொருளாளராக செயல்பட்ட எம்.ஜி.ஆர் அக்டோபர் 11, 1972 அன்று அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

திமுகவில் எம்.ஜி.ஆர்

திரைத் துறையில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர் முதன் முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இணைந்தார். பின் 1953 ஆம் ஆண்டு அதிலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அப்போது தான் திமுக மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. திமுக சார்பாக 1962 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

அந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் சில நாட்களுக்கு முன்பாக எம்.ஜி.ஆர் நடிகர் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எம்.ஆர்.ராதா திராவிடர் கழகத்தில் உறுப்பினராக இருந்தார். அந்த தேர்தலின் போது திராவிடர் கழகம் திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பரப்புரை செய்து வந்தது. எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படம் திமுகவினரால் தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டது.

ஆட்சியைப் பிடித்த திமுக

மொழிப் போராட்டம், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்தது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகள் முழுமையடைவதற்கு முன்பே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் அண்ணாதுரை இறந்தார். அண்ணாதுரை இறக்கும் வரை திமுகவின் உயர் பதவி என்பது பொதுச்செயலாளர் தான்.

அதன் பிறகு திமுகவில் தலைவர் பொறுப்பு உருவாக்கப்பட்டு கருணாநிதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரா.நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர் திமுகவின் பொருளாளர் ஆனார். அவர் 1972 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து விலக்கப்படும் வரை அப்பதவியில் நீடித்தார்.

நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அதன் கட்டுப்பாடுகளையும் மீறி செயல்படும் எம்.ஜி.ஆர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவின் 26 செயற்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு திமுக தலைவர் கருணாநிதியிடமும், பொதுச்செயலாளர் இரா.நெடுஞ்செழியன் ஆகியோரிடம் ஒரு மனுவை அளித்தனர். அந்த மனுவில் திமுகவின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டம், வட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான அனைத்து திமுக நிர்வாகிகள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக கூறப்பட்டிருந்தது. 

அதனடிப்படையில் எம்.ஜி.ஆர் திமுகவின் பொருளாளர் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திராவிட முன்னேற்றக் கழக் பொதுச்செயலாளர் இரா.நெடுஞ்செழியன் 11 அக்டோபர் 1972 அன்று அறிக்கை வெளியிட்டார்.

எம்.ஜி.ஆர் பத்து நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் அக்டோபர் 18, 1972 அன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்க அடித்தளமிட்ட நாள் இன்றாகும்.