பிரதமரின் அரசியல் பழிவாங்கல் இறந்தவர்களைக் கூட விட்டுவைக்கவில்லை...காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பிரதமரின் அரசியல் பழிவாங்கல் இறந்தவர்களைக் கூட விட்டுவைக்கவில்லை...காங்கிரஸ் குற்றச்சாட்டு!

குஜராத் முதல்வராக இருந்தபோது கட்டவிழ்த்து விடப்பட்ட வகுப்புவாத படுகொலைகளுக்கான பொறுப்புக்கூறலில் இருந்து தன்னைத் தானே விடுவிக்கும் பிரதமர் மோடியின்  திட்டமிட்ட உத்தியின் ஒரு பகுதி தான்  இது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்திற்குப் பிறகு, அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசை சீர்குலைக்க சதி செய்ததாக, மறைந்த அகமது படேல் மீதான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது  "மறைந்த அகமது படேல் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளை இந்திய தேசிய காங்கிரஸ் திட்டவட்டமாக மறுக்கிறது. 2002ல் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது கட்டவிழ்த்துவிடப்பட்ட வகுப்புவாத படுகொலை வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் பிரதமரின் உத்தியின் ஒரு பகுதியாகும். பிரதமரின் அரசியல் பழிவாங்கும் இயந்திரம், தனது அரசியல் எதிரிகளாக இருந்து  இறந்தவர்களைக் கூட விட்டுவைக்கவில்லை. இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அரசியல் எஜமானரின் தாளத்திற்கு ஏற்றபடி நடனமாடுகிறது" இவ்வாறு ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.

நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலின்  சதியில்  தொண்டு நிறுவனம் நடத்தி வரும்  டீஸ்டா செடல்வாட் ஒரு பகுதி என்று குஜராத் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் நேற்று  வாதிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.