"குண்டர் சட்டத்தில் திருத்தம்" 4 வாரம் அவகாசம்!

"குண்டர் சட்டத்தில் திருத்தம்" 4 வாரம் அவகாசம்!

குண்டர் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய 4 வாரங்கள் அவகாசம் வேண்டும் என உள்துறை செயலாளர் தரப்பில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொடும் குற்றங்களை செய்பவர்களையும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களையும் ஓராண்டு சிறையில் அடைத்து வைக்க குண்டர் சட்டம் காவல்துறையினரால் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர் தொடர் குற்றங்களில் ஈடுபடுவார் என சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி கருதும்போது, அவர் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பரிந்துரை செய்யப்படும். விசாரணை அதிகாரி கொடுக்கும் குற்றச்சாட்டுகள் சரியானவை எனில் ஆட்சித் தலைவர் அதில் கையொப்பம் இட்டு அவரை ஓராண்டு குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிடுவார். இதுவே மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தார் மாநகரத்தின் கமிஷ்னர் இதில் கையொப்பம் இடுவார். இதன் மூலம் குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஓராண்டுக்கு சிறையில் இருந்து வெளியில் வர முடியாது.

இந்நிலையில் இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய இருப்பதாகவும் இதற்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்க கோரியும் உள்துறை செயலாளர் தரப்பில் இருந்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தனது மகன் மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கைக்கு எதிராக தின்டுக்கல்லை சேர்ந்த நாகராஜ் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மாவட்ட ஆட்சியர்களுக்கு பணிச்சுமைகள் அதிகரித்து இருப்பதால் 1984 குண்டர் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து காவல் துறையில் உள்ள ஐஜிக்களே குண்டர் சட்டத்தில் அடைக்கும் அதிகாரத்தை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும் என உத்தவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று இது தொடர்பாக பதிலளித்துள்ள மாநில உள்துறை செயலாளர். குண்டர் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய 4 வாரங்கள் அவகாசம் வேண்டும் என கோரியுள்ளார்.

இதையும் படிக்க:சிதம்பரம் நடராசர் கோயில்; தொடரும் கனகசபை சர்ச்சை!