கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது...

கர்நாடக மாநிலத்தை உலுக்கிய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது...

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டம் படித்து வருகிறார். கடந்த 25-ம் தேதி மாலையில் அவரும், அவருடன் படிக்கும் காதலரும் சாமுண்டி மலை அடிவாரத்திற்கு காரில் சென்றுள்ளனர். லலிதா திரிபுர பகுதிக்கு சென்ற அவர்கள், காரை நிறுத்திவிட்டு இரண்டு பேரும் நெடுநேரமாக உட்கார்ந்து பேசியுள்ளனர்.

இதனை நோட்டமிட்ட 6 பேர் கொண்ட கும்பல், காதலனை சரமாரியாக உருட்டுக்கட்டையால் அடித்து தாக்கி விட்டு, கல்லூரி மாணவியை தூக்கிக்கொண்டு புதருக்குள் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்து, மாணவியின் தந்தைக்கு போன் செய்து, உடனே 3 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலமாக அனுப்பி வைக்கும்படி மிரட்டியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த காதல் ஜோடி மயக்கம் அடையவே, மர்ம கும்பல் தப்பி சென்றுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதனையடுத்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர்.

ஐந்து பேரும் கூலி வேலை செய்து வருபவர்கள் என்றும், அவர்கள் வேலைக்காக அவ்வப்போது மைசூர் சென்று வருபவர்கள் எனவும் காவல்துறை கூறியுள்ளது. கைதான 5 பேரில் ஒருவர் 18 வயதிற்குட்பட்டவர் என, கர்நாடக டி.ஜி.பி. பிரவீன் தெரிவித்துள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.