பற்களை பிடுங்கிய விவகாரம்...ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு...!

பற்களை பிடுங்கிய விவகாரம்...ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு...!

நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள், உதவி காவல் கண்காணிப்பாளரால் பல் உடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவ்விவகாரத்தில் காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

இதையும் படிக்க : ஆர்.எஸ்.பாரதிக்கு 48 மணி நேரம் அவகாசம்...விளக்கம் அளிக்காவிட்டால்...அண்ணாமலை பரபரப்பு அறிக்கை!

மேலும் இதனை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட அமுதா ஐஏஎஸ், இரண்டு கட்டமாக விசாரணை மேற்கொண்டார். முதல் கட்ட விசாரணையில் யாரும் ஆஜராகாமல் பிறழ் சாட்சியம் அளித்த நிலையில், 2 ஆம் கட்ட விசாரணையில் சூர்யா என்பவரின் தாத்தா மற்றும் மற்றொரு நபரின் தாய் உட்பட 5 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 

அதில் சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி, காவல்துறையினர் தங்களது வீட்டு பெண்களை மிரட்டியதாகவும், ஏஎஸ்பி பல்வீர் சிங் தம்முடைய  பேரனின் பற்களை பிடுங்கியதாகவும் குற்றஞ்சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது ஆயுதங்களை பயன்படுத்தி பலத்த காயம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.