ஏடிஎம் கொள்ளை குற்றவாளி, துப்பாக்கி முனையில் கைது...!!

ஏடிஎம் கொள்ளை குற்றவாளி, துப்பாக்கி முனையில் கைது...!!

ஏடிஎம் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தொடர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான ஆசிப் ஜாவிதை ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை நகரில் உள்ள தேனிமலை, மாரியம்மன் கோவில் தெரு, கலசப்பாக்கம் மற்றும் போளூர் ஆகிய நான்கு இடங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி ஏடிஎம் இயந்திரங்களை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூபாய் 73 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பம் குறித்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை போலீசார் இதுவரை எட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை... 6 போலீசார் ஆயுதப் படைக்கு மாற்றம் |  Thiruvannamalai ATM robbery: 6 policemen transferred to armed forces

இந்நிலையில் கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியை கடந்த ஒரு மாத காலமாக புதுடெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ், அசாம் ஆகிய மாநிலங்களில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இறுதியாக ஹரியானா ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அடிவாரத்தில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்க தகவல் கிடைத்தது.  

இத்தகவலின் பெயரில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட தனிப்படையினர் ஆசிப் ஜாவிதை அதிரடியாக துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர். ஆசிப் ஜாவிதிடமிருந்து ரூபாய் 15 லட்சம் ரொக்க பணம் மற்றும் மாருதி ஸ்விப்ட் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மேலும் ஆசிப் ஜாவித் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க:வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்...!