லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர்... லஞ்ச ஒழிப்புத்துறையால் அதிரடி கைது...

சம்பள உயர்வுக்கு விண்ணப்பித்த உடற்கல்வி ஆசிரியர் இடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர்  லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது.

லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர்... லஞ்ச ஒழிப்புத்துறையால் அதிரடி கைது...

உத்தமபாளையத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் செயல்படுகிறது. உத்தமபாளையம், போடி என இரண்டு தாலுகா உள்ளது. இதில்  மேல்நிலைபள்ளிகள், உயர்நிலைபள்ளிகள்,  மெட்ரிக் பள்ளிகள் என எண்பதிற்கும்  அதிகமாக உள்ளன. இங்கு ஜி.பி.எப்., இண்கிரிமென்ட், சரண்டர், அப்ரூவல்,  சம்பள பில், ஓய்வு ஆசிரியர் பணப்பலன்,  என எல்லாவற்றுக்கும், அதிகளவில்  லஞ்சம் கைமாறுவதாக புகார்கள் எழுந்தது. 

லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகார்களை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் இருந்துள்ளனர். இந்த நிலையில், கம்பம் நகராட்சி நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் சிஷோர்குமார் (38), இவர் பத்து வருட காலம் பணி முடித்ததால், தனது சம்பள உயர்வு, மற்றும் ஊக்க உயர்வு ஆகியவற்றுக்காக, உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்தை அணுகினார். 

இவரது பைல் சம்பந்தமாக உடனடியாக, பணியை முடிக்க, மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் அருண்குமார்(38), என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அடுத்து, சிஷோர் குமார் தேனி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். டி.எஸ்.பி.கருப்பையா தலைமையில் ரகசியமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்புதுறை ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணம் கொடுத்து, சிஷோர்குமாரை அனுப்பியது. இந்த பணத்தை வாங்கும் போது, கையும், களவுமாக அருண்குமார் சிக்கினார்.

இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நுழைந்த லஞ்ச  ஒழிப்புத் துறையினர் மாவட்ட கல்வி அலுவலகத்தின் அனைத்து அதிகாரிகளின் அறைகளிலும் சோதனையிட்டனர். லஞ்சம் வாங்கிய அருண்குமார் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை உத்தமபாளையம் அரசு அலுவலகங்களில் பரபரப்பு ஏற்படுத்தியது.