பைக் கொள்ளையர்கள் கைது- 14 பைக்குகள் பறிமுதல்

அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பைக்குகளை திருடி செல்லும் கொள்ளையர்களை கைது செய்த போலீசார், திருடப்பட்ட சுமார் 28 லட்சம் மதிப்புள்ள 14 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

பைக் கொள்ளையர்கள் கைது- 14 பைக்குகள் பறிமுதல்

அம்பத்தூர் பகுதிகளில் உள்ள வீடு தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்ட விலை உயர்ந்த அதிவேக பைக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்று வருவதாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. புகார்களையடுத்து அம்பத்தூர் உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் ராமசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடக்கி விடப்பட்டது. அதனைதொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் வைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் சாலையில் நடந்து சென்ற நபர் ஒருவர் விலை உயர்ந்த பைக்கை நோட்டமிட்டபடியே அருகில் சென்று அசால்டாக பைக் சைடு லாக்கை காலால் உடைத்தும்,கள்ள சாவி போட்டு திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்தக் காட்சிகளில் பதிவான உருவத்தை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இதற்கிடையில் தனிப்படை போலீசார் நேற்று அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக பைக்கில் வந்த மூன்று பேரை போலீசார் தடுத்து நிறுத்தி சந்தேகத்தின்பேரில் அவர்களிடம் விசாரணை மேற்க்கொண்டனர். 

அதில் அவர்கள் மூன்று பேரும் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது அவர்கள் வந்த பைக்குகளுக்கு எவ்வித ஆவணங்களும் இல்லை என தெரிய வந்தது. அதனைதொடர்ந்து அவர்கள் மூவரையும் போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் ஒருவர் செங்குன்றம் அடுத்த , சந்திரலிங்கம் தெருவை சேர்ந்த முத்துக்குமார், மற்றொருவர் பெரம்பலூர் மாவட்டம், துறையூர் மெயின் ரோடு, குரும்பலுர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், மற்றும் மூன்றாவது நபர் பெரம்பலூர், துறைமங்கலம் சி.ஆர் கேம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஏற்கனவே குற்ற சம்பவத்தில் சிறைக்கு சென்ற முத்துக்குமாருக்கு பல காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என்றும், பிரபல பைக் கொள்ளையன் பூபாலனுடன் சிறையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இருவரும் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் பல இடங்களில் ஒன்றாக பைக் திருடி வந்துள்ளனர். இதில் பூபாலன் குற்ற சம்பவத்திற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இதற்கிடையில் பைக் திருடி வந்துள்ள  முத்துக்குமார் தனது நண்பர்களாகிய மணிகண்டன்,கார்த்திக் இருவரை கைகோர்த்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் திருடப்பட்ட பைக்குகளை திருச்சி கொண்டு சென்று நம்பர் பிளேட் மாற்றி விற்க முயற்சி செய்துள்ளனர். இதற்கிடையில் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திருச்சி விரைந்த போலீசார் 14பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.