''பாட்டில் மணி'' தவறி விழுந்து கால் முறிவு!!

''பாட்டில் மணி'' தவறி விழுந்து கால் முறிவு!!

போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய ரவுடி பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் கால் முறிந்து போயிருக்கிறது. இரவு நேரங்களில் குடித்து விட்டு கும்மாளம் அடிக்கும் பாட்டில் மணியின் அராஜகத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு....

சென்னை அண்ணா நகரில் உள்ள ரவுண்ட் பில்டிங் என்ற பகுதியில் இரவு நேரம் என்றால் ரவுடிகள் அட்டகாசம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. பகலினில் தூக்கம் போட்டு விட்டு இரவினில் ஆட்டம் காட்டும் இந்த ஆந்தைகள், பிறரது தூக்கத்தையும் நிம்மதியையும் கெடுப்பதே இவர்களது வேடிக்கை. 

வழ்க்கம்போல் ரவுண்ட் பில்டிங் பகுதியில் நேற்று ஐந்தாறு பேர் குடித்து விட்டு கும்மாளம் போட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக போலீஸ் வாகனம் ஒன்று சைரனை கிளப்பிக் கொண்டு வந்தவுடன் மின்னல் வேகத்தில் மாயமானார்கள் இந்த மாயாவிகள். 

போலீஸ் வண்டி தூரம் சென்றவுடன் மீண்டும் ஆஜராகி மக்களுக்கு பேஜார் கொடுக்கத் தொடங்கினர். இந்த கலாட்டாவை கவனித்துச் சென்ற ரோந்து காவலர்கள், ஜே.ஜே.நகர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நந்தகோபால், ராயப்பன் என்ற 2 காவலர்கள், ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவதற்கு சென்றனர். கான்ஸ்டபிள்-களை பார்த்த அந்த கும்பல் அப்ஸ்கான்ட் ஆக, ஒரே ஒரு புல்தடுக்கி பயில்வான் மட்டும் ஃபுல் போதையில் நின்றுள்ளான். ஏற்கெனவே குற்றவாளிகளின் சரித்திரப் பதிவேட்டில்  காணப்படும் மணிகண்டன் என்கிற திருட்டு மணிதான் இவன் என போலீசார் தெரிந்து கொண்டனர். 

திருட்டு மணியின் செயலைக் கண்டு காண்டான கான்ஸ்டபிள், லத்தியை எடுத்து லவட்டி எடுப்பதற்குள், கையில் வைத்திருந்த பாட்டிலை உடைத்து தன்னைப் பிடிக்க வந்த போலீசார் நந்தகுமாரின் மூக்கில் ஒரு கீறல், ராயப்பனின் காதில் ஒரு கீறலைப் போட்டுள்ளான் இந்த பாட்டில் மணி...  

ரவுடியால் தாக்கப்பட்ட காவலர்கள்  இருவரும் ரத்தம் வழிய தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதையடுத்து அவர்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் சென்று பார்த்து விட்டு வந்தார். ஜே ஜே நகர் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆறு மணி நேரத்தில் தப்பியோடிய பாட்டில் மணியை தட்டித் தூக்கினர். ஆனால் அப்போதுதான் பாட்டில் மணிக்கு ஆரம்பமானது ஏழரைச்சனி. 

போலீசார் தன்னை பின்தொடர்வதைக் கண்டு திடுக்கிட்டு ஓடிய பாட்டில் மணி, கோல்டன் பிரிட்ஜ் பாலத்தில் இருந்து  குதித்தான். குருவி விஜய் போல தாண்டிவிடலாம் என்றவனுக்கு தாடை உடைந்ததுதான் மிச்சம். வழுக்கி விழுந்தில் வலது காலும் முறிந்ததையடுத்து தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கிறங்கிப் போயிருக்கிறது இந்த றெக்கை கிழிந்து போன கிளி.