கந்துவட்டிக்காக வணிக வளாகத்தை அபகரித்த ஃபைனான்சியர்... விரக்தியில் தற்கொலைக்கு முயற்சித்த நகைக்கடை அதிபர்...

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கந்து வட்டி கேட்டு  ரூ.8 கோடி மதிப்புள்ள வணிக வளாகத்தை அபகரித்ததாக நிதி நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்துவட்டிக்காக வணிக வளாகத்தை அபகரித்த ஃபைனான்சியர்... விரக்தியில் தற்கொலைக்கு முயற்சித்த நகைக்கடை  அதிபர்...

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பிள்ளையார் கோயில் தெருவைச்சேர்ந்தவர் கோமதி விநாயகம் இவருக்கு திருமணமாகி கிருஷ்ணசாந்தி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கோமதிவிநாயகம் திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையில் உள்ள தனது வணிக வளாகத்தில் நகைகடை நடத்தி வருகிறார். அவ்வளாகத்தில் உள்ள மற்ற கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 22ந்தேதி வீட்டில் கோமதிநாயகம் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், பாளை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோமதிநாயகத்தின் மனைவி கிருஷ்ணஜெயந்தி, கந்து வட்டி கொடுமையால், தங்களது வணிக வளாகம் அபகரிக்கப்பட்டதாலேயே தனது கணவர் கோமதிவிநாயகம் தற்கொலைக்கு முயன்றதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தார். அந்த மனுவில்,

எங்களது வணிக வளாகத்தில் உள்ள வாடகை கடை ஒன்றில் நிதி நிறுவனம் நடத்தி வந்த பாவூர்சத்திரம் செல்வவிநாயகர்புரத்தைச் சேர்ந்த தங்கத்துரை மற்றும் அவரது மனைவி செல்வசர்மிளா ஆகியோர், நகைகடை அபிவிருத்திக்காக எங்களது வணிக வளாகம் பெயரில் வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறினர். எங்கள் கிரைய ஆவணத்தை பார்த்த வங்கி மேலாளர் முதலில் லோன் தருவதாக கூறியவர், சில தினங்களில் லோன் தர மறுத்து விட்டார். இதையடுத்து எங்களது நெருக்கடி நிலையை பயன்படுத்தி, தங்கத்துரையின் பெயருக்கு கிரைய ஆவணம் பெயரளவில் மாற்றம் செய்து கொடுத்தால், அதன் அடிப்படையில் தங்கத்துரை பெயருக்கு லோன் வழங்கலாம் என கூறி, தங்கத்துரை மற்றும் அவரது மனைவி செல்வசர்மிளா ஆகியோர் பெயருக்கு தந்திரமாக கிரையம் பதிவு செய்துள்ளனர்.

அதன்பிறகு எங்களுக்கு கடனாக கிடைத்த 95 லட்சம் ரூபாய்க்கு வாரம் 8 பைசா என பேசி, 15-9-20 முதல் 30-8-21 வரை 44 வாரங்களுக்கு வாரம் ரூ.1 லட்சம் 90 ஆயிரம் வீதம் ரூ.83 லட்சத்து 60 ஆயிரமும், மற்றும் வட்டியும் அசலும் சேர்ந்த ரூ.1 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளோம். இந்த தொகையை பெற்றுக்கொண்டும், கடையை எங்களிடம் எழுதி தர மறுத்து வருகிறார்.

மேலும் மேற்கண்ட வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு செல்லும் 2 செண்ட் இடத்தையும் நான் எழுதி கொடுத்தது போல போலியாக அக்ரிமெண்ட் தயார் செய்துள்ளனர். இந்த கந்து வட்டி கொடுமையால், எங்களது வணிக வளாகம் அபகரிக்கப்பட்டதால் மனமுடைந்தது எனது கணவர் தற்கொலைக்கு முயன்றார். எனவே கந்து வட்டி கேட்டு எனது வணிக வளாகத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், பாவூர்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி, கந்து வட்டி கேட்டு, வணிகவளாகத்தை அபகரித்த வழக்கில் தங்கதுரையை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கந்து வட்டி வழங்கில் நிதி நிறுவன அதிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பாவூர்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.