சமையல் மாஸ்டர் சுட்டு கொலை...! சிஆர்பிஎப் வீரரிடம் விசாரணை...!!

சமையல் மாஸ்டர் சுட்டு கொலை...! சிஆர்பிஎப் வீரரிடம் விசாரணை...!!

சீர்காழியில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் மத்திய துணை ராணுவ படை வீரரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சி மேட்டு தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் கனிவண்ணன். இவர் கேட்டரிங் படித்துவிட்டு சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்று வந்த இவர் மீண்டும் சமையல் மாஸ்டர் பணியை தொடர்ந்து வந்தார்.  

இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு  சீர்காழி உப்பனாற்று கரையில் கனிவண்ணன் தனது மோட்டார் சைக்கிள் அருகில் தலையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த  வெள்ளத்தில்  பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனிவண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறுநாள் காலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கனிவண்ணனின் உடல் அனுப்பப்பட்டு பிரேத  பரிசோதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கனிவண்ணனின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று தஞ்சை சரக டிஐஜி. ஜெயச்சந்திரன், மயிலாடுதுறை பொறுப்பு எஸ்பி. ஜவகர் ஆகியோர் சீர்காழியில் முகாமிட்டு விசாரணையை தீவிர படுத்தினர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சீர்காழி ஆர்.வி.எஸ். நகரில் வசிக்கும் மத்திய துணை ராணுவ படை வீரர் தேவேந்திரன் என்பவரிடம் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரிடம் இருந்து அனுமதி பெறாத கை துப்பாக்கி ஒன்றை போலீசார் பறிமுதல்  செய்ததுடன் மேலும் ஏதேனும் கை துப்பாக்கிகள் உள்ளதா என்பது குறித்து அவர் குடியிருக்கும் வீடு மற்றும் சொந்த ஊரான சேத்தூர் கிராமத்தில் உள்ள வீடு ஆகியவற்றில் டிஎஸ்பிக்கள் லாமேக், சஞ்சீவ் குமார் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு உள்ளனர்.