200 சவரன் நகை கேட்டு வரதட்சணைக் கொடுமை செய்த டாக்டர்… முகாந்திரம் இல்லை என அறிக்கை வந்தும் மீண்டும் புகார் அளிப்பதா?  

வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லையென தன் மீதான வரதட்சணைக் கொடுமைப் புகாரை விசாரித்த சமூக நலத்துறை அதிகாரிகளே அறிக்கை அளித்துள்ள நிலையில், மீண்டும் தன் மீது வரதட்சணைக் கொடுமை புகார் பதிவு செய்யப்பட்டிருப்பது முறையா? என மருத்துவர் வினோத் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.  

200 சவரன் நகை கேட்டு வரதட்சணைக் கொடுமை செய்த டாக்டர்… முகாந்திரம் இல்லை என அறிக்கை வந்தும் மீண்டும் புகார் அளிப்பதா?   

சென்னை கொளத்தூர் திருமுருகன் நகரைச் சேர்ந்த மருத்துவர் வினோத் குமாருக்கு கோவையைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணமாக 1 1/2 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு 7 மாதத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் மருத்துவர் வினோத் குமார் 200 சவரன் நகை கேட்டு தனக்கு வரதட்சணைக் கொடுமை அளிப்பதாக மோனிகா ஸ்ரீ வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைதத்தில் புகார் அளித்ததன் அடைப்படையில் மருத்துவர் வினோத் குமார் உட்பட அவரது குடும்பத்தார் 8 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று  வரும் நிலையில், வரதட்சணைக் கொடுமை செய்ததாகக் கூறப்படும் மருத்துவர் வினோத் குமார் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தானும் தனது குடும்பத்தாரும் எந்த வகையிலும் தனது மனைவிக்கோ அவரது பெற்றோருக்கோ வரதட்சணைக் கொடுமை அளிக்கவில்லை எனவும், மோனிகா ஸ்ரீ தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் உண்மைத்தன்மை இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே தனது மனைவியான மோனிகா ஸ்ரீ தரப்பில் அளிக்கப்பட்ட வரதட்சணைக் கொடுமைப் புகார் சமூக நலத்துறை அதிகாரிகள் மூலம் விசாரிக்கப்பட்டு வரதட்சணைக் கொடுமைக்கான முகாந்திரம் இல்லையென அவர்கள் அறிக்கை அளித்துள்ள நிலையில், மீண்டும் தனது மனைவியான மோனிகா ஸ்ரீ-யின் புகாரைப் பெற்று தன்மீது வரதட்சணைக் கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளது முறையா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 

மேலும், தங்களுக்குள்ளான பிரச்சனை வெறும் கருத்து வேறுபாடுகள் மட்டுமே என்ற அவர், தனது மனைவி வசதிபடைத்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், தான் தனது பெற்றோரை விட்டு அவர்களுடன் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்பதே எண்ணம் எனவும், அதற்கு தான் ஒத்துழைக்காததால் மோனிகா ஸ்ரீ பிரச்சனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மோனிகா ஸ்ரீ மற்றும் அவரது குடும்பத்தார் ஆள் வைத்து மிரட்டியதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தான் குடியிருந்த தனது உறவினர் வீட்டையும் தனது மோனிகா ஸ்ரீ மற்றும் குடும்பத்தார் உடைத்து உள்ளே நுழைந்து மிரட்டுவதாக சி.சி.டி.வி ஆதாரங்களுடன் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தான் தனது மனைவியான மோனிகா ஸ்ரீ-யை யூ.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வு (Mains) எழுத அனுமதிக்கவில்லை என்று கூறுவது முற்றிலும் பொய் என்ற அவர், மோனிகா ஸ்ரீ யூ.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்விலேயே (Prelims) தேர்ச்சி பெறவில்லை என்பதுதான் உண்மை எனவும், வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் மோனிகா ஸ்ரீ-யின் பெயர் இல்லாததே அதற்கு ஆதாரம் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தான் கொடுத்த மாத்திரைகளால்தான் மோனிகா ஸ்ரீ-க்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகத் தான் கூறியதாக மோனிகா ஸ்ரீ கூறியுள்ளதும் உண்மையில்லை எனவும், தனது குடும்பத்தாரிலும், மோனிகா ஸ்ரீ-யின் குடும்பத்தாரிலும் பலருக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளதால் மரபணு வழியில் தங்களுக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தனது மனைவியான மோனிகா ஸ்ரீ-யும் அவரது குடும்பத்தாரும் தங்களை சொந்த வீட்டிற்குக் கூடச் செல்ல விடாமல் மிரட்டி வருவதாலேயே தாங்கள் வெளியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வருவதாகவும், பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் முதல் துணை ஆணையர் அலுவலகம் வரை மனு அளித்தும், அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாகவும், அவர்கள் வசதி படைத்தவர்கள் என்பதால் அவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி தங்களின் புகார்களை ஏற்காத வகையில் செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமல்லாமல் தங்கள் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் தன் புகாரை ஏற்காததால், நீதிமன்றத்தை நாடி நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் கடந்த ஆகஸ்டு மாதம் மோனிகா ஸ்ரீ மற்றும் அவரது பெற்றோர் மீது ராஜமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிரிவுகளை தவிர்த்து வேறு பிரிவுகளின் கீழே காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தான் கடந்த ஆகஸ்டு மாதமே மோனிகா ஸ்ரீ-யிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டதாகவும், அதன் பின்னரே தன் மீது மீண்டும் வரதட்சணைக் கொடுமை வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், மோனிகா ஸ்ரீ மற்றும் அவரது குடும்பத்தாரால் பல இடங்களில் வேலை இழந்து, தற்போது தனது மருத்துவ நண்பர்களுடன் உதவிக்காகச் சென்று மருத்துவம் பார்த்து வேலை செய்வதாகவும் தெரிவித்தார். மேலும், தன் மீதான வரதட்சணைக் கொடுமைப் புகாரில் உண்மையில்லை என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தவே உரிய ஆதாரங்களுடன் அனைத்தையும் வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.