மனைவியை கொலை செய்து தற்கொலை செய்யபோவதாக வீடியோ வெளியிட்ட நபர் கல்லூரி மாணவியுடன் மாயம்…  

திருப்பத்தூரில் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ வெளியிட்ட நபர் சென்னை போரூரில் நர்சிங் படித்து வந்த கல்லூரி மாணவியுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கொலை செய்து தற்கொலை செய்யபோவதாக வீடியோ வெளியிட்ட நபர் கல்லூரி மாணவியுடன் மாயம்…   

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தி, திவ்யா தம்பதி. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி மனைவி திவ்யாவை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு மகளுடன் தப்பி சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து தனக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதாகவும், இதனால் மனைவியை பிரிந்து வாழ முடியாது என்பதால் மனைவியை கொலை செய்துவிட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் என வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சத்தியமூர்த்தியை வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நர்சிங் படித்து வந்த திவ்யாவின் தாய்மாமன் மகள் அர்ச்சனா காணவில்லை என அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில், சத்தியமூர்த்தி திருப்பூரில் இருந்து காரில் போரூரில் உள்ள மருத்துவமனைக்கு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் காரை நிறுத்திவிட்டு அர்ச்சனாவுடன் மாயமானது விசாரணையில் அம்பலமானது. தொடர்ந்து போலீசார் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.