திமுக எம்பி வீட்டில் விடிய விடிய வருமான வரித்துறை சோதனை!

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனா்.

திமுக எம்பி, ஜெகத்ரட்சகன், பெயரில் பல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினா். 

அடையாறில் உள்ள அவரது வீடு, பாரத் பல்கலைக்கழகம், சென்னை தியாகராய நகர் திருமூர்த்தி தெருவில் உள்ள ஜெகத்ரட்சகனின் அலுவலகம் மற்றும் நட்சத்திர விடுதியில் சோதனை நடைபெற்றது.

இதேபோல் திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள சவிதா மருத்துவ கல்லூரி, சென்னை வேளச்சேரி பாலாஜி மருத்துவமனை, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை உட்பட பல இடங்களில் சோதனை நடைபெற்றது. 

மேலும் ஈக்காட்டுத்தாங்கல் பாளையக்காரன் தெருவில் அமைந்துள்ள வீடு, குரோம்பேட்டையில் உள்ள உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. 100-க்கும் அதிகமான அதிகாரிகள்  ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே தேவரியம்பாக்கம் பகுதியில் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான எலைட் என்கிற மதுபான தொழிற்சாலை மற்றும் தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினா்.  

அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான  கால்டன் சமுத்ரா நட்சத்திர விடுதியில் 15 பேர் கொண்ட   வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனா். 

இதேபோல் புதுச்சேரி மாநிலம் அகரம் கிராமத்தில்  உள்ள ஜெகத்ரட்சகன் எம்.பிக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரியிலும் வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டனா். துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை காவலர்களின் பாதுகாப்புடன்  ஐடி சோதனை நடைபெற்றது.

40 இடங்களில் விடிய விடிய நடைபெற்று வரும் இந்த சோதனை தொடா்ந்து நீடித்து வருகிறது. 

இதையும் படிக்க: "காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர தி.மு.க அரசுக்கு திராணி இல்லை" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்