ஆசிரியரை கடத்தி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இன்ஸ்பெக்டர்!

திருச்செந்தூர் அருகே ஆசிரியரை  கடத்தி, பணம் கேட்டு கொலை மிரட்டில் விடுத்தாக காவல்துறை ஆய்வாளர் உள்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆசிரியரை கடத்தி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த இன்ஸ்பெக்டர்!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள குறிப்பான்குளம் குப்பாபுரத்தை சேர்ந்த வேதமுத்து மகன் சாலமோன்(52). இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகபுரம் துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி சாலமோன் தனது உறவினர் திருமண நிகழ்ச்சியிலும், மாலையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அப்போது மாலையில் சாலமோன் சொல்போனில் அவரது உறவினர் தினேஷ் அழைத்துள்ளார். இரவில் செல்போனை பார்த்த சாலமோன், போனில் தினேசை அழைத்துள்ளார். அப்போது செல்போனில் பேசிய தினேஷ் அவசர வேலைக்காக சோலைகுடியிருப்பு வந்திருப்பதாகவும், ஊருக்கு வெளியே வரும்படி அழைத்துள்ளார்.

அதன்படி சாலமோன் நடந்தே ஊருக்கு வெளியே சென்றார். அப்போது டெம்போ டிராவலர் வேனில் வந்த நபர்கள் சாலமோன் கழுத்தை பிடித்து வலுகட்டயமாக ஏற்ற முயற்சி செய்துள்ளனர். அப்போது தினேஷ் அவர்களிடம் ஏதே பேச வேண்டும் என்று தானே சொன்னீர்கள், பிறகு ஏன் வலுகட்டயமாக ஏற்றுகிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது நான்கு பேர்களும் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வாருங்கள் அங்கு பேசி கொள்ளலாம் என கூறி சாலமோனை அவரது உறவினர் தினேஷ் மோட்டார் சைக்கிளில் வரும் படி கூறியுள்ளனர். அவர்களும் மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் போலீஸ் நிலையத்திற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது திருச்செந்தூர் அருகேயுள்ள சத்யாநகர் சந்திப்பில் மோட்டார் சைக்கிள் வரும் போது மறித்து நிறுத்தி சாலமோனை டெம்போ வேனில் ஏற்றியுள்ளனர்.

அப்போதுதான் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலைய போலீசார் தன்னை சென்னைக்கு அழைத்து செல்வது தெரியவந்தது. வேனில், சென்னை ஆற்காடு சாலையில் சில்வர் டச் பைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் நடத்தி வரும் சிவகுமார் நாயர்(45), வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்ட கூடிய நான்கு போலீசார் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது வேனில் இருந்த சாலமோனிடம் உனது தம்பி தேவராஜ் எனக்கு ரூ.21 லட்சம் பணம் தர வேண்டும். உன்னை தூக்கினால் தான் எனக்கு பணம் வரும் என சிவகுமார் நாயர் கூறினாராம். சாலமோனை இரவு பகலாக பல இடங்களுக்கு வேனில் அழைத்து சென்றனர். அக்டோபர் மாதம் 24-ந் தேதி சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அருகில் சென்று வேனை நிறுத்தியுள்ளனர்.

அங்கு சாலமோனை விடுவிக்க ரூ.3 லட்சம் கேட்டுள்ளனர். அதன்பிறகு சாலமோன் பயந்து செல்போனில் தனது மனைவியிடம் நடந்ததை கூறி ரூ.3 லட்சத்தை கொடுத்து என்னை காப்பாற்றங்கள் என கூறியுள்ளார். அதன்பிறகு டெம்போ வேனில் அழைத்து சென்ற செலவிற்காக மேலும் ரூ.1.50 லட்சம் பணத்தை கேட்டு அவரை டார்ச்சர் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சென்னையில் உள்ள சகோதரியின் கணவர் மூலம் போலீசாரிடம் ரூ.4.50 லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர். அதில் ரூ.3 லட்சத்தை சிவகுமார் நாயரிடம் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் சாலமோனை விடுவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சாலமோன் தனது மனைவி புஷ்பராணியிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புஷ்பராணி திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் டி.ஐ.ஜி.யிடம் பதிவு தபால் மூலம் புகார் அனுப்பியுள்ளார். அதற்கும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சாலமோன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் படி திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் பைனான்சியர் சிவகுமார் நாயர், சம்பவத்தன்று பணியாற்றிய வளசரவாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் அமுதா, குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் கண்ணா மற்றும் பார்த்தால் அடையாளம் காட்ட கூடிய நான்கு போலீசார் மீது திருச்செந்தூர் தாலுகா போலீசார் ஆள் கடத்தல், ஆபாசவார்த்தைளால் திட்டுதல், கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.