ஜெகத்ரட்சகனின் மகளின் கெஸ்ட் ஹவுசில் சோதனை...!

வருமான வரித்துறை சோதனையில் ஜெகத்ரட்சகனின் மகள் வீட்டில் இரண்டே முக்கால் கோடி ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் மற்றும் 50 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமாக மதுபான ஆலை, கல்வி நிறுவனங்கள், என பல்வேறு நிறுவனங்கள் உள்ள நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன் பேரில், ஜெகத்ரட்சனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5-ம் தேதிமுதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி, சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு,  தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல், ஆழ்வார் ஆராய்சி மையம், குரோம்பேட்டையில் உள்ள ரீலா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். 

இதில் அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 10 கோடி ரூபாய் பணம், கோடிக்கணக்கான வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஜெகத் ரட்சகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட நகைகளை கணக்கிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிக்க : திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 5-வது நாளாக சோதனை!!

இதேபோன்று, பூவிருந்தவல்லியை அடுத்த தண்டலத்தில் உள்ள சவிதா கல்லூரிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில், கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், சவிதா மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் இருந்து சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இதனைத் தொடர்ந்து, ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள ஜெகத்ரட்சகனின் மகளுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுசில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 வெளி நாட்டு கைக் கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அத்துடன் கட்டுக் கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், முக்கிய கோப்புகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து, ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மருமகன் நாராயணசாமி இளமாறனிடம் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.