அரை டஜன் ஆப்பிள் பழங்களை கொடுத்து, 40 பவுன் நகையை திருடிய பெண்மணி!!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் பேச்சு கொடுத்த பெண்மணி, 40 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளார். 

தர்மபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி பகுதியில் வசித்து வந்தவர்கள் சிவசேகர் - ஜெயந்தி தம்பதியர். இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 26-ம் தேதியன்று வேலைக்காக சென்றனர். அப்போது சிவசங்கரின் தாயார் பெருமா மற்றும் உறவினர் ஒருவர் என இரண்டு பேர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது வீட்டின் வெளியே வெள்ளை நிற காரில் வந்த பெண்மணி ஒரு முதியவருடன் வீட்டுக்குள் சென்றார். 

அவர்களை பார்த்து யார் என கேட்ட மூதாட்டியிடம், உங்கள் மருமகள் ஜெயந்தியின் தோழி எனக் கூறி அறிமுகமானார். மேலும் அரை டஜன் ஆப்பிள் பழங்களையும் கொண்டு சென்ற பெண்மணி, சிறிது நேரத்திலேயே வெளியே கிளம்பினார். ஆனால் மீண்டும் வீட்டுக்குள் சென்ற பெண்மணி, தன்னுடன் வந்தவர் முக்கியமான பேப்பரை மறந்து வைத்து விட்டதாகவும், அதனை தேடியே தற்போது வந்ததாகவும் கூறியிருக்கிறார். 

அப்போது ஏற்கெனவே வாங்கி வந்த ஆப்பிள் பழத்தை அவராகவே துண்டு துண்டாய் வெட்டி மூதாட்டிக்கு கொடுத்ததைத் தொடர்ந்து சாப்பிட்ட பெருமா, சுயநினைவை இழந்து மல்லாக்க விழுந்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண்மணி, பீரோவில் இருந்து 40 பவுன் தங்க நகைகள், 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு காரில் ஏறி மாயமானார். 

திரைப்பட பாணியில் நடந்த இந்த நூதனத் திருட்டு குறித்து விசாரணையில் இறங்கிய பாப்பரப்பட்டி போலீசார், இதனை செய்தது சேலத்தை சேர்ந்த பிரபல கொள்ளைக்காரி மைதிலியாக இருக்கலாம் என தீவிரமாக தேடி வருகின்றனர். 

முன்பின் தெரியாதவர்களை வீட்டுக்குள் அழைத்து விருந்து கொடுக்க நினைத்த மூதாட்டி, நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் மலைத்துப் போயுள்ளார்.