மளிகைக்கடையில் 1.50 கோடி ரூபாய் கையாடல்... தேடப்பட்டு வந்த 2 பெண்கள் கைது...

சென்னையில் மளிகைக் கடையில் பணியாற்றிய நபர் தனது குடும்பத்தாருடன் இணைந்து 1.50 கோடி ரூபாய் வரை கையாடல் செய்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மேலும் இரு பெண்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மளிகைக்கடையில் 1.50 கோடி ரூபாய் கையாடல்... தேடப்பட்டு வந்த 2 பெண்கள் கைது...

சென்னை பாரி முனையில் பாண்டி என்பவருக்குச் சொந்தமாக இயங்கி வந்த மளிகைக் கடையில் மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றி வந்தார். வேலைக்கு சேர்ந்தது முதல் உரிமையாளரான பாண்டிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் நடந்துகொண்டு கடையின் பொறுப்புகளை கவனிக்கத் துவங்கிய நிலையில் வேல்முருகன் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்களிடம் பெறும் பணத்தை தன் பெயரிலும், தனது மனைவி, சகோதரர் மற்றும் சகோதரர் மனைவி பெயர்களிலும் புதிதாக வங்கிக் கணக்கு துவங்கி அதில் செலுத்தத் துவங்கியுள்ளார். 

இந்த வகையில் வேல் முருகன் சுமார் 1.50 கோடி ரூபாய் பணம் வரை கையாடல் செய்ததை கண்டறிந்த கடை உரிமையாளர் பாண்டி, இச்சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பணக் கையாடலில் ஈடுபட்ட வேல் முருகனை கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளிகளான வேல் முருகனின் மனைவி பூர்ணிமா, சகோரரர் மனைவி வினோதா, சகோதரர் உள்ளிட்டோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில்  பூர்ணிமா மற்றும் வினோதா ஆகிய இருவரும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பதுங்கியிருப்பதை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்து வந்த பூர்ணிமா மற்றும் வினோதா ஆகிய இருவரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவாக இருந்து வரும் வேல்முருகனின் சகோதரரையும் போலீசார் தேடி வருகின்றனர்.