மேட்ரிமோனி மூலம் மோசடி செய்த வழக்கு... நைஜீரியர்களை போலீஸ் காவலில் எடுக்க மனு...

மேட்ரிமோனி மூலம் மோசடியில் ஈடுபட்டு கைதான நைஜீரியர்கள் இருவரை 5 நாள் காவலில் எடுக்க மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மேட்ரிமோனி மூலம் மோசடி செய்த  வழக்கு... நைஜீரியர்களை போலீஸ் காவலில் எடுக்க மனு...

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு மேட்ரிமோனியல் பண மோசடி தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தனர். குறிப்பாக தங்களது இரண்டாம் திருமணத்திற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள வசதி படைத்த குடும்பத்துப் பெண்களை குறிவைத்து மேட்ரிமோனி மூலம் வெளிநாட்டில் மருத்துவராக பணியாற்றுவதாக போலியான பெயர் மற்றும் அடையாள அட்டைகளை பயன்படுத்தி ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவ்வழக்கில் தனிப்படை அமைத்து டெல்லி சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார் அங்கு வைத்து மோசடியில் தொடர்புடைய பாலினஸ் சிகேலுவோ, சிலிடஸ் கேஸ்சுக்வு ஆகிய இரு நைஜீரியர்களை கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த கும்பல் வட மாநிலங்களில் உள்ள வசதியில்லாத மக்களை அணுகி சிறிய தொகை கொடுத்து அவர்களின் வங்கிக் கணக்குகளைப் பெற்று அதன் மூலம் பணப் பரிமாற்றம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும், இந்த மோசடியில் மேலும் சில நைஜீரியர்களும் சம்மந்தப்பட்டுள்ளதை கைதான நைஜீரியர்கள் மூலம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அறிந்தனர். 

அதனடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலினஸ் சிகேலுவோ மற்றும் சிலிடஸ் கேஸ்சுக்வு ஆகிய இரு நைஜீரியர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டு சைபர் கிரைம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர். விரைவில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.