"கனிமவள முறைகேடு வழக்கில் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்யலாம்" உயர் நீதிமன்றம்  உத்தரவு!

"கனிமவள முறைகேடு வழக்கில் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்யலாம்" உயர் நீதிமன்றம்  உத்தரவு!

கனிமவள முறைகேடுகளில் வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அடைமிதிப்பான் குளத்தில் அமைக்கபட்டிருந்த கல் குவாரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பாறைகள் சரிந்து விபத்து நடந்தது. இந்த விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் சிலர் பலியானார்கள். 

இந்த சம்பவத்தையடுத்து குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. அதன் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குவாரியை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி அதன் உரிமையாளரான குமார், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.2 rescued from quarry accident in Tirunelveli admitted in GH- Dinamani
 
அம்மனுவில், "எங்கள் குவாரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். எங்கள் வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர். நாங்கள் குவாரியை நடத்தவில்லை. குவாரியை குத்தகைக்கு விட்டிருந்தோம். இதனால் குவாரியை தொடர்ந்து நடத்தவும், வாகனங்களை விடுவிக்கவும், வங்கி கணக்கை செயல்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை ஏற்கனவே நீதிமன்றம் விசாரித்த போது அரசு தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, மனுதாரரின்  குவாரியில் விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இதனையொட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது என்றார். 

இதையடுத்து நீதிபதிகள், சுரங்கம் மற்றும் கனிம வளச் சட்டப்படி வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் வருவாய்த் துறையினருக்கு தான் உள்ளது. கோர்ட்டு உத்தரவுகளிலும் அவ்வாறே குறிப்பிடப்படுகிறது. ஆனால் அரசாணையில் வாகனங்களை பறிமுதல் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களாக வருவாய்த்துறையினருடன், போலீசாரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இதில் இறுதி முடிவு எடுக்க இந்த வழக்கு 3 நீதிபதிகள் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் நீதிபதிகளின் பரிந்துரையை ஏற்று இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி, முரளி சங்கர் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்து முடித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்கு முடிவில், வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் போலீசாருக்கு உள்ளது என உத்தரவிட்டுள்ளது.

கனிம வளங்களை விசாரிக்கும் நீதிமன்றம் மற்றும் இது தொடர்பான சிறப்பு நீதிமன்றம் ஆகியவை வழக்கு விசாரணை செய்வது, வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பது போன்ற முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும். இதில் விசாரணை அதிகாரிகளாக உள்ள காவலர்கள் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு விதிகளின்படி அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க:கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதல்...!