திசை மாறும் ரவுடி தணிகாவின் கதை... எஸ்ஐ மீது, தணிகாவின் உறவினர்கள் அடுக்கடுக்காக புகார்!!

திருந்தி வாழ்ந்து வந்த தமது கணவரை அழைத்து சென்று  போலீசார் சுட்டுவிட்டதாக ரவுடி தணிகாவின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் தணிகா என்கிற தணிகாசலம். இவர் மீது திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் A+ ரவுடி பிரிவில் இருந்து வருகிறார். 

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் தணிகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த தணிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி செங்கல்பட்டு தனிப்படை போலீசார், சென்னையில் பதுங்கி இருந்த தணிகாவை கைது செய்து சித்தாமூர் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

அப்போது செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பகுதியில் வந்தபோது தணிகா போலீசார் பிடியில் தப்பிப்பதற்காக காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் காரில் இருந்து தப்பியோட முயற்சி செய்ததாக கூறி, போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தணிகாவின் வலது கை, வலது கால் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. தொடர்ந்து அவரை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து தணிகாவை மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் பெண்ணை தனியாக காரில் ஏற்றி தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த 2 லட்சத்தை, காவலர்கள் அபகரித்து கொண்டதாவும் அடுக்கடுக்காக புகார் தெரிவித்துள்ளனர் தணிகாவின் உறவினர்கள்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "சமீபத்தில் குற்றவாளியின் மாமனார் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரை சந்திக்க சென்றபோது தணிகாசலத்தை சுற்றிவழித்த போலீசார் மருத்துவமனையில் இருந்த அவர்களது உறவினரிடம், ஆஜர்படுத்திவிட்டு பின்னர் விட்டுவிடுகிறோம் என கூறி அழைத்துச் சென்றனர்" என உறவினர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து, காலையில் தொலைகாட்சியை பார்த்தே தணிகாசலம் சுடப்பட்டது தெரியவந்தது எனவும், அதன் பின்னர் நேற்றிரவு தணிகாசலத்தின் மனைவியின் சகோதரியை காரில் அழைத்து சென்று, விசாரணை என்ற பெயரில், நடத்தை மீறி  நடந்து கொண்டதாகவும், காரில் சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் பணத்தையும் எஸ் ஐ அபகரித்துக்கொண்டு கொண்டு மிரட்டியதாகவும், எஸ் ஐ மீது புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்னரே திருந்தி வாழ்ந்து வந்த தணிகாசலம், மூன்று மாதத்திற்கு முன்பு டீஜிபியை சந்தித்து திருந்தி வாழ்வதாக கடிதம் கொடுத்து வந்த நிலையில், இவ்வாறு அழைத்து சென்று சுட்டுவிட்டு, தற்போது கை கால் அகற்றபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தணிகாவின் மனைவியும் மாமியாரும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.