செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு முடித்து வைப்பு!

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு முடித்து வைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் எனக் கூறி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது.

நீதிபதி நிஷா பானு, மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை ஏற்று, செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட்டார். ஆனால் நீதிபதி பரத சக்கரவர்த்தி, ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ததுடன், 10 நாட்களில் சிறை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

மாறுபாடான தீர்ப்பு வழங்கப்பட்டதால் வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பை ஏற்பதாகக் கூறி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை தீர்மானிக்க வழக்கை மீண்டும் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்தார்.

இதை தலைமை நீதிபதி ஏற்று ஒப்புதல் அளித்த நிலையில், வழக்கு, நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அளித்த தீர்ப்பில் உறுதியாக இருப்பதால், இந்த வழக்கில் சொல்வதற்கு ஏதுமில்லை என நீதிபதி நிஷா பானு தெரிவித்தார்.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்ற காவல் குறித்து முடிவு செய்யவே மூன்றாவது நீதிபதி, வழக்கை இந்த அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்ததாகவும், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தீர்ப்பை எதிர்த்து இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கோரினார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி காவல் குறித்து தீர்மானிக்க மறுத்த நீதிபதிகள், அனைத்து அம்சங்களையும் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் எனக் கூறி, மேகலாவின் மனுவை முடித்து வைத்து தீர்ப்பளித்தனர்.

இதையும் படிக்க:மணிப்பூர் விவகாரம்: "அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும்" வாசுகி வலியுறுத்தல்!