ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த ஆறு பேர் கைது!

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த ஆறு நபர்களை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த ஆறு பேர் கைது!

ஆந்திராவிலிருந்து சென்னை வழியாக விழுப்புரத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் மாதவரம் ரவுண்டானாவில் இன்று மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த இரு கார்களை நிறுத்தி சோதனை செய்த போது, ஆறு நபர்கள் பல்பொருள் சரக்குகளுக்கு மத்தியில் 110 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. 

விசாரணையில் இவர்கள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனலட்சுமி (56), சங்கர் (48), வெங்கடேஷ் (34), நந்தகோபால் (31), மேகலா (32) மற்றும் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (27) என தெரியவந்தது. பின் 6 நபர்களையும் வியாசர்பாடியில் உள்ள போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது இந்த கும்பலுக்கு தலைவி தனலட்சுமி என்பது தெரியவந்தது. மேலும், இவர் தான் மற்ற நபர்களுக்கு கஞ்சா தொழில் செய்ய கற்று கொடுத்ததும், தனலட்சுமி தான் மற்ற 5 நபர்களையும் ஆந்திராவிலுள்ள அன்னவரம் பகுதிக்கு அழைத்துச் சென்று 110 கிலோ கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது.

தனலட்சுமி மீது கள்ளச் சாராயம் காய்ச்சிய வழக்கில் ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட 6 நபர்களிடமும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.