ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவருக்கு இரண்டாவது முறையாக அறிவாள் வெட்டு...!!

ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவருக்கு இரண்டாவது முறையாக அறிவாள் வெட்டு...!!

சிதம்பரத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவரை  இரண்டாவது முறையாக கொல்ல முயற்சி நடந்துள்ளது.


தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் ஜெயச்சந்திரராஜா (50). இவர் சிதம்பரம் நகரில் உள்ள மன்னார்குடி தெரு ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். 


இன்று ஜெயச்சந்திரராஜா தனது பைக்கில் சிதம்பரம் நகரில் உள்ள மெய்க்காவல் தெரு வழியாக வந்துள்ளார். அப்போது அவரது வாகனத்தை வழி மறித்த பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை அரிவாளால் வெட்டினார். அப்போது கையால் தடுக்க முற்பட்டபோது அவருக்கு கை, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து மர்ம நபர்கள் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.


இதனால் படுகாயமடைந்து மயங்கி விழுந்த ஜெயச்சந்திரராஜாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட ஜெயச்சந்திரராஜா மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். 


ஜெயச்சந்திரராஜாவை அரிவாளால் வெட்டியது யார்? என்ன காரணம்? என்பது குறித்து சிதம்பரம் நகர போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து சக ரேஷன் கடை பணியாளர்கள் மருத்துவமனை முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


மர்ம நபர்களின் தாக்குதலுக்கு உள்ளன ஜெயச்சந்திரராஜா கடந்த மாதம் 21ந் தேதி இரவு இதுபோல் தாக்கப்பட்டார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உடன், சிதம்பரம் நகர போலீசார் அதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை தாக்கியது யார் என விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அடுத்த சில  தினங்களிலேயே 2 வது முறையாக அவர் மீண்டும் தாக்கப்பட்ட சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.