கோவில் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் கைது!

 கோவில் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் கைது!

புதுச்சேரியில் கோவில் நிலம் அபகரிப்பு வழக்கில் இதுவரை 12 பேரை  சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், தற்போது கோயில் நிலத்திற்கு பத்திரபதிவு செய்த  சார்பதிவாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

புதுச்சேரி, பாரதி வீதியில் உள்ள  காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான 64,035 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.12 கோடியே 50 லட்சம் மதிப்பிலான விவசாய நிலம் ரெயின்போ நகர் பகுதியில் இருந்தது. இந்த இடத்தை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துவிட்டதாக கோயில் நிர்வாகிகள் சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரினை அடுத்து, டிஜிபி உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் தலைமையில் புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில் 
சென்னையை சேர்ந்த ரத்தினவேல், அவரது மனைவி மோகனசுந்தரி, மனோகரன் புதுவையை சேர்ந்த  பழனி மற்றம் சிலர் போலி ஆவணங்களை தயாரித்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டு மனைகளாக மாற்றி  விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 12 பேரை போலீசார் இதுவரை கைது செய்திருந்தனர்.
 
இந்நிலையில் அந்த பத்திரத்தில் பல பிழைகள் இருந்தும் அதனை கண்டுகொள்ளாமல் பத்திரப் பதிவு செய்ததாக அப்போதைய உழவர்கரை சார்பதிவாளரரும், தற்போதைய வில்லியனூர் சார்பதிவாளருமான சிவசாமியை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்ந்து புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் இன்னும் சில அரசு அதிகாரிகள் கைது செய்யப்படலாம் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:'வேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராத திட்டம்' காவல்துறை விளக்கம்!