உளவுத்துறை தலைமைக் காவலருக்கே இந்த நிலைமையா... மயக்க ஊசி போட்டு கடத்தி பணம் பறித்த கும்பல்...

மயக்கி ஊசி போட்டு தன்னை கடத்திச் சென்று 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றதாக 3 பேர் மீது உளவுத்துறை தலைமைக் காவலர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உளவுத்துறை தலைமைக் காவலருக்கே இந்த நிலைமையா... மயக்க ஊசி போட்டு கடத்தி பணம் பறித்த கும்பல்...

சென்னை சூளைமேடு பஜனைக் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி (45). மாநில உளவுத் துறையில் தலைமைக் காவலராக டி.ஜி.பி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தார்.

அதில், கடந்த 28 ஆம் தேதி தான் பணிக்கு புறப்பட்டு சாலையில் நடந்து சென்றபோது, தனக்குத் தெரிந்த நபரான சூளைமேட்டைச் சேர்ந்த அஜய் விக்கி என்பவர் காரில் தன்னருகில் வந்து,  "தான் லைட் ஹவுஸ் பக்கம்தான் செல்கிறேன், வாருங்கள் உங்களை அங்கு விட்டு விடுகிறேன்" எனக் கூறி காரில் அழைத்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

காரில் அஜய் விக்கி-யுடன் மேலும் இருவர் இருந்ததாகவும், கார் சென்று கொண்டிருக்கும் போது தனது முதுகில் ஏதோ ஒரு ஊசியை எடுத்து குத்தியதால் தான் மயக்கமடைந்து விட்டதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

பின்னர் கண்விழித்து பார்த்தபோது தான் கிழக்குக் கடற்கரைச் சாலையின் ஏதோ ஒரு இடத்தில் சாலையோரத்தில் கிடந்ததாகவும், தன்னிடமிருந்த செல்போன் காணாததால் தான் உடனடியாக ஏ.டி. எம் சென்று தனது வங்கிக் கணக்கை பரிசோதித்தபோது அதில் 1 லட்சம் ரூபாய் காணாமல் போயிருந்தது தெரிய வந்ததால் அதிர்ச்சியடைந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை காரில் மயக்க ஊசி போட்டு கடத்திய அஜய் விக்கி மற்றும் கூட்டாளிகள்தான் தனது செல்போனையும், 1 லட்சம் ரூபாய் பணத்தையும் திருடியுள்ளனர் என்றும் அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் கூறியுள்ளார்.

இந்த புகார் குறித்து சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகாரில் உண்மைத் தன்மை உள்ளதா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளதால் அதனை உறுதி செய்யும் பொருட்டு சம்பவ இடத்திலுள்ள சி.சி.டி.வி காட்சிகளையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அஜர் விக்கி என்பவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.