சீட்டு கட்டிய பணத்தை திருப்பிக் கேட்டவரை நடுரோட்டில் வைத்து எரித்த குண்டர்கள்...

ஆந்திராவில், சீட்டுக் கட்டிய பணத்தை திருப்பிக் கேட்ட, செல்போன் கடை உரிமையாளரை, நடுரோட்டில் வைத்து குண்டர்கள் தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீட்டு கட்டிய பணத்தை திருப்பிக் கேட்டவரை நடுரோட்டில் வைத்து எரித்த குண்டர்கள்...

ஆந்திரா மாநிலம் ஹணுமகொண்டா பகுதியில் ஏராளமான சீட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்த நிறுவனங்களில் பணம் செலுத்தி, சீட்டு எடுத்தாலும் ஆண்டு கணக்கில் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும், பணம் கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுவது, தாக்குவது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது..

இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் ராஜூ, தனது மகளின் திருமணத்திற்கு அட்சாலா என்ற சீட்டு நிறுவனத்தில் 5 இலட்சம் ரூபாய்க்கு சீட்டு கட்டியுள்ளார். சீட்டுப் பணம் செலுத்தும் முதிர்வுக் காலம் முடிந்த போதும், ஓராண்டாக பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

இதனால், அந்த சீட்டு நிறுவனத்திற்கு சென்ற ராஜூ, பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். பின் ராஜூ கடைக்கு திரும்பியபோது, அட்சாலா நிறுவனத்திலிருந்து வந்த அடியாட்கள் சிலர், ராஜூ மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.ராஜூவை காப்பாற்ற சென்ற அவரது நண்பருக்கும் தீப்பற்றியது. இதில் ராஜூ உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நண்பர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.