லோன் கேட்ட தாய்...6 மணிக்கு போன் செய்த வங்கி ஊழியர்...ஆபிஸ் புகுந்து அடித்த மகன்

வங்கிக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய இளைஞர்...

லோன் கேட்ட தாய்...6 மணிக்கு போன் செய்த வங்கி ஊழியர்...ஆபிஸ் புகுந்து அடித்த மகன்

வங்கிக்கடன் தொடர்பாக மாலை 6 மணிக்கு மேல் பெண்ணுக்கு போன் செய்த வங்கி மேலாளரை வங்கிக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கி அடித்துத் துவைத்த சம்பவம் நாகை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் செயல்படும் அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் அரசு மட்டுமல்லாது தனியார் வங்கிகள் மற்றும் சிறு வங்கிகள் மூலமாக கடன் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தவணையில் மகளிர் சுய உதவிக் குழுவில் இருந்து தவணைத் தொகையை வங்கிக்கு செலுத்த வேண்டும் என்ற நடைமுறை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தவணைத் தொகையை உரிய காலத்திற்குள் செலுத்தவில்லை என்றால் வங்கி ஏஜென்டுகள் மற்றும் மேலாளர்கள் உரிய நபருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதும், அதுவே  சில நேரங்களில் பிரச்சனையாகி விடுவதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த வருடம் திண்டுக்கல் அருகே வங்கி தவணை தொகையை வசூலிப்பதற்க்காக பெண்ணின் வீட்டுக்கு வந்த வசூல் ஏஜென்ட் அவரது வீட்டுக்குள் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டு பணம் கொடுத்தால் தான் செல்வேன் என கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் வங்கி ஏஜென்ட் கைது செய்யப்பட்டார். 

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொண்ட பெண், விவசாயி ஒருவரை வங்கிக்கடன் செலுத்தவில்லை எனக் கூறி மாரியாதை குறைவாக பேசிய சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாகை அருகே இதற்கு அப்படியே நேர்மாறாக வங்கி மேலாளரை வங்கிக்கே சென்று இளைஞர் ஒருவர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

நாகை மாவட்டம் பாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலவேணி. இவர் தனது பகுதியில் உள்ள பெண்கள் சிலருடன் சேர்ந்து மகளிர் சுய உதவி குழு ஒன்றை ஆரம்பித்துள்ளார். பின்னர் மகளிர் சுய உதவி குழு மூலம் கடன் பெறுவதற்காக கொளப்பாடு பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் மனு செய்துள்ளார். இதையடுத்து கடன் வழங்குவது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையின் மேலாளர் பிருத்விராஜ் என்பவர் கமலவேணியை தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால், கமலவேணிக்கு பதில் அவரது மகன் கோபிஆனந்த் தொலைபேசியை எடுத்து, வங்கி மேலாளர் பிரித்திவிராஜிடம் பேசியுள்ளார். அப்போது வங்கி மேலாளர் என்றால் வங்கி வேலை நேரத்தில் பேச வேண்டியதுதானே, மாலை 6 மணிக்கு மேல் எனது தாய்க்கு ஏன் போன் செய்து பேசுகிறாய் என கேட்டுள்ளார். கடன் கேட்டது நீங்கள் தானே நான் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன் என பிரித்திவிராஜ் கூறியதால் கோபம் அடைந்த கோபிஆனந்த் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து போனிலேயே இருவரும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி சரமாரியாக திட்டி கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து சண்டையிட்டு கொண்டு இருந்த இருவரும் ஒருகட்டத்தில், வங்கி மேலாளரின் பேச்சால் ஆத்திரமடைந்த கோபி ஆனந்த் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று அங்கிருந்த மேலாளர் பிரித்திவிராஜ் இடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறி கைகலப்பானது. தொடர்ந்து கோபிராஜ் பிருத்விராஜை கடுமையாக தாக்கியது அங்கிருந்த  சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் பிரித்திவிராஜ் புகார் அளித்ததன் பேரில், விசாரணை செய்த போலீசார் கோபிஆனந்த் உடல்நிலை சரியில்லாததால் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.