பெண்களை தற்கொலைக்குத் தூண்டி, மிரட்டி, பணம் பறிக்கும் யூடுபர் கும்பல்!

சமூகசெயற்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்களை மிரட்டி பணம்பறிக்கும் யூடியூபர் கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகரிக்கும் சைபர் மிரட்டல்களால் தற்கொலைக்கு தூண்டப்படும் பெண்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் திருச்சி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

பெண்களை தற்கொலைக்குத் தூண்டி, மிரட்டி, பணம் பறிக்கும் யூடுபர் கும்பல்!

சமூகவலைதளங்களின் செயல்பாடுகள் மற்றும் ஆதிக்கம் அதிகரித்துவரும் அதேவேளை சமூக வலைதளங்கள் சார்ந்த சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. மேலும், இவற்றால் பாதிப்புக்குள்ளாகி பலர் கூனிக்குறுகி தற்கொலை செய்துக்கொள்ளும் கொடூர சம்பவங்களும் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.

அந்தவகையில் பலரும் யூடியூப் சேனல் துவங்கி ஏதேனும் ஒன்றை பதிவிட்டு விளம்பரம் தேடும் நிலையில், வாசகர்களைக் கவருவதற்காக சமையல் குறிப்பு, மருத்துவம், பயனுள்ள குறிப்புகள் போன்ற பதிவுகளைப்போட்டு, லைக், கமெண்ட்டு, மற்றும் திறமைக்கு ஏற்ற வருமானமும் ஈட்டி  வருகின்றனர் பலர்.

இதனிடையே வெளிநாட்டில் இருந்து செயல்பட்டுவரும் யூடியூப் சேனல் ஒன்றின் உதவியோடு  தமிழகத்தைச் சேர்ந்த  யூடியூப் சேனலைச் சேர்ந்த (சுசிமா )என்ற பெண், சமூக சேவைகளில் ஈடுபட்டு வருபவர்களை நண்பர்களாக்கி சமூக சேவை செய்ய, அவ்வப்போது பண உதவி பெற்றுவந்துள்ளார். ஒருகட்டத்தில் அவர்களின் அந்தரங்கங்களை மறைமுக கேமரா மூலம் வீடியோ பதிவு செய்து அவர்களையும், குடும்பத்தினரையும் மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இது போன்ற தொந்தரவுகளுக்கு ஆளான பல்வேறு தரப்பினரும் காவல் நிலையம் மற்றும் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் அதனை, மிரட்டும் நபர்கள் ஒரு பொருட்டாக மதிக்காமல், ஒரு சில தெரிந்த காவல் துறையினரைக் கையில் வைத்துக்கொண்டு செயல்படுவது போல தங்களது மிரட்டல் மற்றும் பணம்பறிக்கும் செயலை தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த மோசடி கும்பலினால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளான சமூகசேவையில் ஈடுபட்டுள்ள பலரும் தற்போது காவல்துறை உதவியை நாடியுள்ளனர்.

திருச்சி மாநகர காவல்துணை ஆணையர் கார்த்திகேயனிடம், மோசடி கும்பல் தொடர்பாக பாதிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பலர், ‘தாங்கள் நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும்’ என்றும், ‘தங்களைப்போன்ற பலரும் ஏமாறக்கூடாது’ எனவும் புகார் மனு அளித்தனர். குடும்பபெண்களை மானபங்கப்படுத்தி அவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் அளவிற்கு லண்டனில் செயல்பட்டு வரும் யூடியூபர் செயல்பாடு தவறானது என்றும், இதற்கு தமிழகத்தில் உள்ளவர்கள் பலரும் உடந்தையாக செயல்பட்டு பணம்பறிக்கும் நோக்கிலேயே செயல்பட்டுவருகின்றனர் என்றும் குற்றம்சாட்டினர்.

மேலும், இது போல மிரட்டல் விடுக்கும் நபர்கள், அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து செக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு அவமானப்படுத்தும் நோக்கில் பிளாக்மெயிலில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தனர். தமிழகம், பெங்களுரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் இந்த மோசடி கும்பலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை இதுபோன்ற கும்பலை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுத்து, தொண்டு நிறுவனத்தினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இது குறித்து வெளியான வீடியோக்களை பத்திர்க்கையாளர்களிடம் காண்பித்தது குறிப்பிடத்தக்கது.