இறந்த தாயுடன் பேசுவதாக கூறி இரண்டு கோடி ரூபாய் மோசடி...! மந்திரவாதி கைது...!!

இறந்த தாயுடன் பேசுவதாக கூறி இரண்டு கோடி ரூபாய் மோசடி...! மந்திரவாதி கைது...!!

மாந்திரீகம் செய்து இறந்த தாயுடன் பேசுவதாக கூறி இரண்டு கோடி ரூபாய் வரை ஏமாற்றிய கேரள போலி மந்திரவாதியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, ஆண்டர்சன் சாலையைச் சேர்ந்த  கௌதம் சிவசாமி என்பவர் சென்னை காவல் ஆணையாளர்  அலுவலகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் கடந்த 2005-ஆம் ஆண்டு நைஜீரியா நாட்டில் மென்பொறியாளராக  வேலை செய்த போது உடன் வேலை செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் அறிமுகமானதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தாங்கள் இருவரும் நல்ல குடும்ப நண்பர்களாக பழகியதாகவும் தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு வாக்கில் துபாய்க்கு வேலை நிமித்தமாக சென்றதாகவும் அதன் பின் சுப்பிரமணி கேரளாவிற்கு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

சென்னைக்கு வரும்போது எல்லாம் சுப்பிரமணி தன்னை வந்து சந்தித்து நன்றாக பழகியதாகவும் கூறியுள்ளார். மிகுந்த கடவுள் பக்தியுடைய நபர் என்பதை தெரிந்துகொண்ட சுப்ரமணி தன்னை அடிக்கடி கோவில்களுக்கு அழைத்துச்சென்று ஆன்மீக வழிகளில் ஈடுபடுத்தியும், புட்டபருத்தி சாய்பாபா அவரிடம் நேரடியாக பேசுவதாக கூறி தன்னை நம்ப வைத்ததாக தெரிவித்துள்ளார்.தன்னை அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்று இறந்துபோன தன்னுடைய அம்மாவின் ஆன்மா அவரிடம் பேசுவதாககூறியும், பூஜையறையில் சாமி படத்திலிருந்து விபூதியை விழச்செய்தும், திடீரென்று எலுமிச்சம்பழம் வரவழைத்தும், மந்திர மாயாஜால வித்தைகள் செய்து கட்டுப்பாட்டில் வைத்ததாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தன்னுடைய அம்மா பல விஷயங்களை பேசுவதாகவும் அவருக்கென்று தனியாக இலை போட்டு சாப்பாடு போட வேண்டும் எனவும் அவர் கூறிய விஷயங்களை செய்ய வேண்டும் எனவும் சுப்பிரமணி வலியுறுத்தியதாக கூறினார். தன் அம்மா பேசுவது தனக்கு கேட்கவில்லை என  சொல்லும்போது பாவம் செய்தவர்களுக்கு அம்மா பேசுவது கேட்காது மனதில் சுத்த எண்ணம் இல்லாததால் கேட்கவில்லை என கூறி நம்ப வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்

அதன் பின் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து தனது தாய் கூறியதாக பலருக்கு பணம் கொடுக்கும் படியும் செலவு செய்யும்படியும் கூறியதால் அதனை நம்பி பல காரியங்கள் செய்ததாக தெரிவித்துள்ளார். இவ்வாறாக தன்னிடமிருந்து கடந்த 2015 முதல் 2019- வரையிலான காலத்தில் வங்கி பரிவர்த்தணை மற்றும் ரொக்கமாக மொத்தமாக 2 கோடிக்குமேல் பணத்தை ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் கூறுவதை எல்லாம் செய்யும் போது தனது மூன்று வயது மகள் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனதாகவும், அடுத்தடுத்து தனது சகோதரர் மற்றும் தந்தை ஆகியோர் இறந்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தான் தங்கி இருக்கும் சொகுசு பங்களாவை சுப்பிரமணி தன் பெயரில் எழுதி வைக்குமாறு தாய் கூறியதாக தெரிவித்துள்ளார். தன் தாய் தந்தையர் வாழ்ந்த வீட்டை கொடுக்க முடியாது என்று தெரிவித்ததன் அடுத்து, சுப்பிரமணி செய்வதை யோசித்து பார்க்கும் பொழுது தன்னை மந்திரம் மாந்திரீகம் எனக் கூறி ஏமாற்றுவதாக உணர்ந்தார்.

குறிப்பாக சுப்பிரமணி தன் வீட்டிற்கு வந்த பிறகு தான் பல இறப்புகள் நடந்துள்ளது எனவும் பணம் அதிகம் அளவு செலவாகி வீட்டையும் அபகரிக்கும் வரை சென்றதும் கௌதம் சிவசாமி உணர்ந்தார். மேலும் சுப்பிரமணி கூறியதற்காக தனது எட்டு வயது மூத்த மகள் யாரிடமும் பேசக்கூடாது எனவும் சரியாக படிக்க வைக்காமலும் இருந்ததும், மேலும் தனது மனைவியிடம் தவறாக தன்னை சித்தரித்து பிரித்ததும் சுப்பிரமணி சூழ்ச்சி என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறாக மாதம் 1 லட்சரூபாய் மேல் சம்பாதிக்கும் தன்னை, குடும்பத்தை பிரித்து  கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பணத்தை கொள்ளை அடிப்பதை போலி மந்திரவாதி சுப்பிரமணி ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் சுப்ரமணியின் மோசடி செயல்கள் தெரிந்து  கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது, சுப்ரமணி  தன்னை மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக சுப்ரமணி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக்கோரி கொடுத்த புகாரில் கடந்த மே மாதத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த சுப்ரமணி என்பவரை கைது செய்ய உதவி ஆணையாளர் ஜான்விக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து ஒரு வருட காலமாக கேரளா திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு ஆகிய பகுதிகளில் மாறி மாறி தலைமறைவாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இறுதியாக தலைமறைவாக இருந்து வந்த போலி மந்திரவாதி சுப்ரமணியை  கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்தனர்.

விசாரணை செய்வதில் போலி மந்திரவாதி சுப்பிரமணி மந்திர மாந்திரீக வித்தைகளை கூறி கௌதம் சிவசாமியிலிருந்து கொள்ளை அடித்த இரண்டு கோடி ரூபாய் பணத்தை வைத்து ஆடிட்டர் தொழிலை கேரளாவில் சிறப்பாக செய்ய பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் உல்லாசமாக வாழவும் தன் மனைவிக்கு தங்கம், வைரம் என நகைகளை வாங்கிக் கொடுத்ததும் தெரியவந்தது. அது மட்டுமல்ல தனது மகளை வெளிநாட்டில் பணத்தை செலவழித்து படிக்க வைத்ததாகவும் சுப்பிரமணி வாக்குமூலம் அளித்துள்ளார்.

புகார்தாரர் கௌதம் சிவசாமியின் மூன்று வயது மகள் இறப்பதற்கு போலி மந்திரவாதி சுப்பிரமணி காரணமா? என்ற ஒரு நோக்கத்திலும் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. இதே போல் எத்தனை பேரை ஏமாற்றியுள்ளார் என்பது குறித்து சுப்ரமணி காவலில் எடுத்து விசாரிக்கவும் மத்திய குற்றப்பிரிவு போலிசார் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிக்க:ரகசிய தோட்டத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா...! அதிரடி நடவடிக்கை எடுத்த மதுரை தனிப்பிரிவு காவல்துறை..!!