"செந்தில் பாலாஜிக்கு ஏதேனும் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்க முடியும்?" துஷார் மேத்தா வாதம்!

"செந்தில் பாலாஜிக்கு ஏதேனும் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்க முடியும்?" துஷார் மேத்தா வாதம்!

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து ஏதேனும் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்க முடியும் என அமலாக்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன் வைத்தார். சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டம் இயற்றும் முன், சட்டவிரோத பண பரிமாற்றங்களால் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது குறித்தும் பின்னர், ஐ.நா.வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது குறித்து விளக்கிய துஷார் மேத்தா, சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத் துறையின் கடமை எனவும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது என்பது வழக்கை புலன் விசாரணை செய்யும் அமலாக்கத் துறையின் கடமையை மறுப்பதாகும் எனக் குறிப்பிட்டார்.

ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்கத் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணை தான் எனச் சுட்டிக்காட்டிய அவர், உரிய காரணங்கள் இல்லாமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வகை செய்துள்ளதால், 2005ம் ஆண்டு முதல் இதுவரை, இச்சட்டத்தின் கீழ் 330 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

அமலாக்கத் துறை புலன் விசாரணை செய்ய முடியாது என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை நிராகரித்த அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அமலாக்கத் துறையின் புலன் விசாரணையால், வங்கி மோசடி வழக்குகளில், 19,000 கோடி ரூபாய் பணத்தை மீட்டு வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளில் கைதுக்கு முன் சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம்  தானே தவிர, அந்த ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது என்பதால்  புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது என்றார்.

கைதுக்கு பிறகும், புகார் தாக்கலுக்கு பிறகும், புலன் விசாரணை செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் மேல் விசாரணை செய்யவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டிய சொலிசிட்டர் ஜெனரல், சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் குறைந்தபட்ச தண்டனை ஏழு ஆண்டுகள் என்பதாலும், கைது செய்த அமலாக்கத் துறை ஜாமீன் வழங்க முடியாது என்பதாலும் அமலாக்கத் துறைக்கு காவல் துறை அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் விளக்கினார்.

ஆனால்,  சுங்க வரிச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் ஓராண்டு முதல் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்த அதிகாரிகளே ஜாமீனில்  விடுதலை செய்யக் கூடிய குற்றங்களும் உள்ளதால் அந்த சட்டங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காவல் துறை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை எனவும், கைது நடவடிக்கை சரியானது தானா என்பதை அறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட நபரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி தொடர்ந்து நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு என்பது, ஜாமீன் வழங்க மறுத்தது தான் எனவும் அதன் காரணமாக அமலாக்கப் பிரிவு காவலில் வைத்து விசாரிக்க கோர முடியாது என்பதல்ல என துஷார் மேத்தா தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க கோரி மனுத்தாக்கல் செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை எனவும், அப்படி காவல் கோரியது நீதிமன்ற உத்தரவை மீறியதல்ல எனவும் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, காவலில் விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், செந்தில் பாலாஜியை காவலில்   எடுத்து விசாரிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து ஏதேனும் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்க முடியும். அதனால் நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியதாகவும், காவலில் எடுத்திருந்தால் முதல் 15 நாட்களை கருத்தில்  கொள்ளக் கூடாது என கோர முடியாது என்றார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத காவலில் இல்லை எனவும், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் குறிப்பிட்டார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரியதில் இருந்து நீதிமன்ற காவலில் இருப்பதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்த துஷார் மேத்தா, செந்தில் பாலாஜி கைதின் போது அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறியிருக்கிறார் என்றார்.

கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க முடியாவிட்டால், அதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கோர முடியும் எனவும், மூத்த நீதிபதி நிஷா பானு தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் எவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டாம். ஆட்கொணர்வு மனு  தாக்கல் செய்தால் போதுமானது எனவும் குறிப்பிட்ட துஷார் மேத்தா, பொதுவாக அனைவரது இதயத்திலும் 40 சதவீத அடைப்பு  இருக்கும் எனக் கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.

மேகலா தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கின் விசாரணை ஜூலை 14ம் தேதிக்கு நீதிபதி கார்த்திகேயன்  தள்ளிவைத்தார்.

இதையும் படிக்க:"போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை" அமைச்சர் சிவசங்கர் உறுதி!