கட்டு போட 50ரூ... ஸ்ட்ரெச்சர் தள்ள 50ரூ... அட்டூழியம் செய்யும் அரசு மருத்துவமனை!! 

கட்டு போட 50ரூ... ஸ்ட்ரெச்சர் தள்ள 50ரூ... அட்டூழியம் செய்யும் அரசு மருத்துவமனை!! 

தென்காசி அருகே அரசு மருத்துவமனையில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்கு, புண்ணில் மருந்து வைத்து கட்டுபோட ஓவ்வொரு முறையும் 50 முதல் 500ரூ வரை லஞ்சம் கேட்டதால்  முதியவர் ஒருவர் தவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார்குளத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளியம்மாளுக்கு காலில் ஏற்பட்ட புண்ணிற்கு மருத்துவம் பார்பதற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 

ஆனால் அங்கோ ஒவ்வோரு முறையும் கட்டுபோட, வண்டி தள்ள என 50 முதல் 500 ரூபாய் வரை லஞ்சம் கேட்டுள்ளனர். இப்படி பலமுறை பணம் கொடுத்து தன் மனைவியை காப்பாறி வந்துள்ளார் லட்சுமணன். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இவர், ஒரு கட்டத்தில் பணம் இல்லாததால் கையில் இருந்த 19 ரூபாயை இது தான் என்னிடம் இருக்கிற கடைசி காசு என கண்ணீருடன் கொடுத்துள்ளார். ஆனால் அதனையும் வாங்கி கொண்டு பணம் கொடுத்தால் தான் மருத்து வைத்து கட்டுவேன் என்றும், இல்லையெனில் கட்டமுடியாது என்றும் கூறியுள்ளார் மருத்துவமனை ஊழியர் பழனி. இதனால் மனமுடைந்த விவசாயி லட்சுமணன் என்ன செய்வது என்று தெரியமல் வேதனையுடன் நின்றது காண்பவர்களை கலங்க வைத்துள்ளது.

இந்த தள்ளாடும் வயதில் கூட, மனைவியை காப்பாற்ற துடிக்கும் விவசாயி லட்சுமணன், தங்களை போல பாமர மக்களிடம் லஞ்சம் கேட்கும் மருத்துவமனையின் ஊழியர் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் பேசுகையில், இங்கு, பணம் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என அனைவரும் வருவார்கள். அவர்களை ஆதரித்து நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டியதே, இந்த அரசு மருத்துவமனைகளின் கடமையாகும். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் லஞ்சம் வாங்கினால், பாமர மக்களின் நிலை என்னாகும்? என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். 

அரசு மருத்துமனைகளில் இது போன்று தொடர்ந்து நடக்கும் அநியாய செயல்கள், அலட்சியமான சிகிச்சைகள் போன்ற தவறுகளை, அரசு எப்போது சரி செய்யும்? எப்பொழுது நடவடிக்கை எடுக்கும்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இதையும் படிக்க || ஓட்டுனர் உறங்கியதால் கரை தட்டிய விசை படகு!