அண்ணே.. நாக தோஷமா? கம்மி ரேட்... 4000 ரூபாதான்!

அண்ணே.. நாக தோஷமா? கம்மி ரேட்... 4000 ரூபாதான்!

பிரசித்தி பெற்ற சங்கரன் கோயில் சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் வாசலில் கடை வியாபாரிகள் அடாவடி வசூலில் இறங்குவதாக புகார்கள் எழுந்துள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் அமைந்துள்ளது சங்கரநாராயண சுவாமி - கோமதி அம்பாள் கோயில்.  தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் இந்த கோயிலும் மிக முக்கியமான ஒன்றாகும். 

அதோடு நாகதோஷம் தீர்க்கும் தலங்களில் சங்கரன்கோயில் மிக மிக பிரசித்தி பெற்ற கோயில் இது. உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர்களும் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்களை வழிமறித்து அடாவடி வசூலில் இறங்கி வருகின்றனர் சில வியாபாரிகள். 

இந்து அறநிலையத்துறை சார்பாக கோயிலுக்குள்ளேயே கடைகள் வைக்கப்பட்டபோதும், வெளியே உள்ள சிறு வணிகர்கள் சில உத்திகளை கையாண்டு வருகின்றனர். 

முதலில் காலனிகளை பாதுகாப்பதற்கு இலவச இடம் எனக் கூறி பக்தர்களை அழைப்பதும், அவ்வாறு வருபவர்களிடம் பெயர், ஊர், ராசி போன்றவற்றை கேட்பது வழக்கம். 

ஒரு வேளை வெளியூர், வெளிநாட்டினர் என தெரிந்தால் அவர்களிடம் ஈடுபடும் நடவடிக்கையே வேறு. ராசி குறித்து கேட்கும் வியாபாரிகள் நாகதோஷம் தீர்ப்பதற்கான சிலைகள் தன்னிடம் இருப்பதாகவும், மிக மிக குறைந்த விலையிலேயே தானே வந்து தீர்த்து வைக்க உதவுவதாகவும் கூறி மூளைச் சலவை செய்து வருகின்றனர். 

சில அடி தூரம் சென்றால் கோயில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட கடைகளில் 10 கிராம் கொண்ட நாக சிலை 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறதென்றால், அதே சிலை வெளியே உள்ள கடைகளில் 4000 ரூபாய்க்கு விற்று வருவதாக புலம்புகின்றனர் பக்தர்கள். 

அவ்வாறு சிக்கிய பக்தர் ஒருவர் கூறுகையில், பூஜைக்கு தேவைப்படும் தேங்காய், பழம், பூ, மாலை, பன்னீர், வெற்றிலை பாக்கு, இவற்றோடு நாகர் உருவம் கொண்ட தகடுகளையும் தந்து தோஷத்தை தீர்த்து வைக்க உதவுவதற்கான கூலியும் என மொத்தமாக 3000 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 8 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது, என்கிறார்.

சில வியாபாரிகளின் இந்த அடாவடி வசூலால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் மறுமுறை தவிர்க்க முயன்றபோதும் அது முடியாமல் போகிறது. ஏனென்றால் கோயில் கோபுரத்தை வணங்கி முடிப்பதற்கு முன்பே ஈக்கள் போல மொய்த்து விடுவதால் சிரமத்துக்குள்ளாகின்றனர் பக்தர்கள். 

எங்கோ ஒரு ஜோதிடர் நாகதோஷம், செவ்வாய் தோஷம் என கூறிக் கொண்டு அவர் ஒரு தொகையை வசூலித்தார் என்றால், அந்த தோஷத்தை கழிப்பதற்கு இங்கே வந்தால் இங்கு அதற்கும் மேல் வசூல் வேட்டை நடைபெறுகிறது. இவ்வாறு ஆயிரக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டு நிம்மதியை பறிகொடுத்து விட்டே வெளியேறுவதாய் புலம்புகின்றனர் பக்தர்கள்.

இதையும் படிக்க || திருமணம் கடந்த உறவால் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!!