பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு: எட்டாவது நபர் ஆந்திராவில் கைது!

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு: எட்டாவது நபர் ஆந்திராவில் கைது!

சென்னையில்  நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த கடைசி கொள்ளையர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள ஜே எல் நகைக்கடையில் கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி வெல்டிங் மிஷினால் துளை போட்டு சுமார் 8 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து நகைக்கடையின் உரிமையாளர்  ஸ்ரீதர் திருவிக நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

இதில் முக்கிய குற்றவாளிகளான கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகியோர் இரண்டரை கிலோ தங்க நகைகளுடன் பெங்களூர் மகாலட்சுமி லேஅவுட் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூருக்கு சென்று இரண்டு பேரையும் கைது செய்தனர்.  மேலும், இவர்களிடமிருந்து இரண்டு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூருவில் சரணடைந்த கங்காதரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தபோது அவரது மனைவி கீதா மற்றும் மைத்துனரான ராகவேந்திரா ஆகியோரிடம் நகைகளை கொடுத்து உருக்கி அதை பணமாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து கீதா மற்றும் ராகவேந்திரா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து  400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து பெங்களூருவில் வைத்து அருண் என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு இந்த வழக்கில் இதுவரை கங்காதர். கஜேந்திரன். திவாகர். ரத்தேஷ்குமார் என்கின்ற ஸ்டீபன். அருண்குமார். கீதா. ராகவேந்திரா ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்


இவர்களிடம் இருந்து இதுவரை ஆறு கிலோ 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் கடைசி குற்றவாளியான கௌதம் என்ற நபரை போலீசார் தேடி வந்தனர். அவர் ஆந்திராவில் இருப்பதை அறிந்த செம்பியம் போலீசார்  நேற்று கௌதம் (26) என்ற நபரை கைது செய்தனர். இவர் திருட்டு சம்பவத்தில் டிரைவராக செயல்பட்டது தெரியவந்தது

இவரிடம் இருந்து சுமார் அரை கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட கௌதமை செம்பியம் போலீசார், இன்று அதிகாலை சென்னைக்கு அழைத்து வந்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: பொதுக்கழிப்பிட கட்டுமான பணிகளுக்கு பொதுக்குடிநீரை பயன்படுத்திய ஒப்பந்ததாரர்!