அளவை மீறி அள்ளப்படும் மணல்...நடவடிக்கை எடுக்கப்படுமா?!

அளவை மீறி அள்ளப்படும் மணல்...நடவடிக்கை எடுக்கப்படுமா?!

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பணிகளுக்காக அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஏரியில் மண் எடுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஆகியவை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொன்னேரி தாலுகாவில் பெருங்காவூர் கிராமத்தில் 375 ஏக்கரில் பரவியுள்ள ஏரி, அதை சுற்றியுள்ள 8 கிராமங்களுக்கும் நீர் ஆதாரமாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களுக்கு பாசன வசதிக்காகவும் பயன்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் இந்த ஏரி வழியாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் குழாய்களை பதிப்பதற்கு சென்றம்பாக்கத்தை சேர்ந்த ஜி.ஆர்.வி. மினரல்ஸ் என்ற நிறுவனத்திற்கு 3 மீட்டர் மட்டுமே மண் எடுக்கலாம் என குத்தகை உரிமை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி 15 மீட்டர் ஆழம் வரை ஏரி மண் தோண்டி எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.  இதனால் ஏரி அழியும் அபாயம் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுப்பதற்காக தாலுகா வாரியான குழுக்களை அமைக்க வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டும், அது போன்ற குழுக்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.  எனவே அனுமதிக்கப்பட்டதை விட சட்டவிரோதமாக பெருங்காவூர் ஏரியில் மண் எடுப்பதை தடுக்க தமிழ்நாடு அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசு மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஆகியவை பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிக்க:  லாட்டரி பண பரிவர்த்தனை...முடக்கப்பட்ட 451.07 கோடி!!