கால்நடைகளை தாக்கி வரும் சிறுத்தை...! கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்த விவசாயிகள்...!

கால்நடைகளை தாக்கி வரும் சிறுத்தை...! கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்த விவசாயிகள்...!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மற்றும்  மாந்தோப்புகளில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று மாலை கைலாசநாதர் கோவில் பின்புறம் உள்ள மலை மாதா கரடு பகுதியில் தெ.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான பசு மாட்டை சிறுத்தை தாக்கி அடித்துக் கொன்று, பசுமாட்டின் உடலை அப்பகுதியில் உள்ள கரட்டு பகுதிக்கு இழுத்துச் சென்று பாதி உடலை தின்றது.

இதனிடையில் மாட்டின் உரிமையாளர் பசுவை தேடிய நிலையில் சிறுத்தை தாக்கப்பட்டு பசுமாடு உயிரிழந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பசு மாட்டின் உரிமையாளர் தேனி வனச்சரக அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சிறுத்தை தாக்கப்பட்டு உயிரிழந்த பசு மாட்டை ஆய்வு செய்து அதை பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அப்பகுதியில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தால் இதுவரையில் 5க்கும் மேற்பட்ட பசுமாடுகள் பலியாகி உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் இருப்பதால் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.