விளையாட்டாக பேருந்தில் ஏறி சுற்றிய சிறுமிகள்...! ஊர் திரும்ப தெரியாமல் தவிப்பு...!

விளையாட்டாக பேருந்தில் ஏறி சுற்றிய சிறுமிகள்...! ஊர் திரும்ப தெரியாமல் தவிப்பு...!

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி கருக்கி பகுதியை சேர்ந்தவர் தம்பி ராஜ். இவரது மகள் 14-வயதான ஆஸ்லின் ராஜிசாவும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெபசிங் என்பவரின்  மகள் 11-வயதான ஜெஸ்வினி என்ற இரு சிறுமிகளும் செவ்வாய்கிழமை மாலை அருகில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளனர். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் சிறுமிகள் குறித்த எந்த தகவலும் இல்லாத நிலையில் தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் சிறுமிகளை யாரேனும் கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் இரு சிறுமிகள் மட்டும் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மிடாலம் பகுதியில் இரண்டு சிறுமிகள் ஊருக்கு செல்ல வழி தெரியாமல் நிற்பதாக கருங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு சென்ற கருங்கல் போலீசார் அந்த சிறுமிகளை மீட்டு விசாரித்ததில் அவர்கள் பள்ளியாடி கருக்கி பகுதியை சேர்ந்த ஆஸ்லின் ராஜிசா மற்றும் ஜெஸ்வினி என்பதும் வீட்டில் இருந்து கடைக்கு வந்த அந்த சிறுமிகள் விளையாட்டாக இலவச அரசு பேருந்தில் ஏறி நாகர்கோவில் சென்றதும் பின்னர் சொந்த ஊருக்கு செல்லும் பேருந்து எது என்று தெரியாமல் மிடாலம் பேருந்தில் ஏறி வந்ததாகவும் கூறினர். இதனையடுத்து சிறுமிகள் குறித்த விபரத்தை கருங்கல் போலீசார் தக்கலை போலீசாரிடம் தெரிவித்த நிலையில் தக்கலை போலீசார் சிறுமிகளை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிக்க : புதைத்த குழந்தை தலை காணவில்லை... கிரகணத்தில் கடத்தப்பட்டதாக தகவல்...