நாளை நடைபெறவுள்ள புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு...!

நாளை நடைபெறவுள்ள புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு...!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நேற்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறக்கூடிய பகுதியில் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மாவட்ட நிர்வாகத்தால் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினரோடு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துறை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி எந்த காரணத்திற்காக ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டது என்று தெரிவித்தும் குறிப்பாக உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கு நிலுவையில் உள்ளதால் உரிய விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும். இல்லை என்றால் பீட்டா போன்ற அமைப்புகள் விதிமுறைகள் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துகிறார்கள் என்று வீடியோ ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டையும் நிறுத்தக்கூடிய நிலைக்கு போவார்கள், அதனால் நமது மாவட்டம் குறிப்பாக தச்சங்குறிச்சி அதற்கு காரணமாக இருந்து விட கூடாது. அதனால் தான் ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதனால் பாதுகாப்பு குறைபாடுகள் முழுமையாக செய்த பிறகு போட்டி நடத்தலாம் என்று தெரிவித்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எட்டாம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டனர். இதன் பின்னர் வருவாய் கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசனை செய்து 8 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்தார்.

இதனையடுத்து இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு நாளைய தினம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் இரட்டை பாரிக்கார்டுகள் அமைக்கும் பணி, மேடை சரி செய்யும் பணி, வாடிவாசலை ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டு சமப்படுத்தி மஞ்சு அமைத்தல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு  வருகின்றனர். மேலும் இன்று காலை 10 மணி முதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாடுபிடி வீரர்கள் விழா குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 800 காளைகளும் 300 காளையர்களும் பங்கேற்க உள்ளார்கள் என ஜல்லிக்கட்டு விழா குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் நாளை நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டை அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : 3 வது நாளாக தொடரும் ஊழியர்கள் போராட்டம்...! பசியால் தவிக்கும் விலங்குகள்..!