மஞ்சளாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்...! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

மஞ்சளாறு அணையில் இருந்து  உபரி நீர் வெளியேற்றம்...! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்நிலையில் மஞ்சளாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 57 அடியில், முன்னதாக 55 அடியாக இருந்த நிலையில் தற்போது அணைக்கு வரும் நீர், அப்படியே மஞ்சளாறு ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மேலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அப்படியே மஞ்சளாறு ஆற்றில் திறந்து விடப்படும் சூழ்நிலை உள்ளது. 

இதனால் மஞ்சளாறு ஆற்றங்கரையோர பகுதியிலான தேனி,  திண்டுக்கல் மாவட்ட ஆற்றங்கரை ஓர பகுதிகளான கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலகுண்டு, விருவீடு உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக மஞ்சளாறு அணைப்பகுதியில்  10.5 சென்டிமீட்டரும், ஆண்டிபட்டியில் 4 சென்டிமீட்டரும் மழை அளவு பதிவாகியுள்ளது.

மேலும் மஞ்சளாறு அணையின் முழு கொள்ளளவான 57 அடியில், அணையின் நீர் இருப்பு 55 அடியாக உள்ளது. இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து 90 கன அடியாக உள்ள நிலையில், அந்த 90 கன அடி உபரி நீரும் அப்படியே மஞ்சளாறு ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.