சங்கர் ஜிவால் துவக்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம்..யாருக்காக?

சங்கர் ஜிவால் துவக்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம்..யாருக்காக?

சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் (Special Medical Health Camp) திறப்பு விழா சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். 

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் சென்னை போக்குவரத்து காவலர்கள் பயனடையும் வகையில்  9 தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து, 50 மருத்துவர்கள் கொண்ட சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

சங்கர் ஜிவால் மேடைப்பேச்சு

போக்குவரத்து காவலர்கள் நாள்தோரும் 8 மணி நேரம் சாலைகளில் தொடர்ந்து நின்று கொண்டே பணி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. சாலைகளில் ஏற்ப்படும் மாசு காரணமாக போக்குவரத்து காவலர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் வழங்கப்பட்டுள்ளது. 

குடும்பத்தாருக்கும் பரிசோதனை

இதனை காவலர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காது, மூக்கு, கண், எலும்பு, இதயம், உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பரிசோதனைகள் இங்கு செய்யப்படுகிறது. போக்குவரத்து காவல்துறையினர் தங்களுடைய குடும்பத்தாருக்கும் இங்கு பரிசோதனை செய்து கொள்ளலாம். 

சென்னை முழுதும் முகாம்

இன்று நடத்தப்படும் சிறப்பு பரிசோதனை முகாமில் 300 போக்குவரத்து காவல்துறையினர் சிகிச்சை பெற்றுக் கொள்கின்றனர். வரும் வாரங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை சென்னை முழுவதிலும் உள்ள அனைத்து போக்குவரத்து காவல்துறையினருக்கும் பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

மேலும் படிக்க | சர்ச்சையான தீபிகாவின் காவி உடை...ஆதரவு தெரிவித்த பிரபல நடிகர்...!

இந்த நிகழ்ச்சியில் சென்னை கூடுதல் ஆணையர் லோகநாதன், உள்ளிட்ட காவல்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.