இரண்டாவது நாளாக முகாமிட்டுள்ள காட்டுயானைகள்..! விரட்டும் பணியில் வனத்துறையினர்...!

இரண்டாவது நாளாக முகாமிட்டுள்ள காட்டுயானைகள்..! விரட்டும் பணியில் வனத்துறையினர்...!

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை சோக்காடி போன்ற சிறு வனப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக முகாமிட்டுள்ள மூன்று  காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள விளை நிலங்களில் நுழைந்து வாழை, நெல், கரும்பு போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இதனிடையே தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த மூன்று காட்டு யானைகள் இடம்பெயர்ந்து கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில் நேற்றைய தினம் முகாமிட்டு அங்குள்ள வாழை,நெற்பயிர்களை சேதம் செய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் வேதனை அடைந்தனர். இதையடுத்து ராயக்கோட்டை வனத்துறையினர் காட்டு யானைகளை பட்டாசு வெடித்து ஆழப்பட்டி வன சரகத்திற்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்து மூன்று யானைகள் கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையின் நீர்த்தேக்கம் அருகே உள்ள பச்சிக்கானபள்ளி மற்றும் வெங்கிகானப்பள்ளி, கிராமத்தில் உள்ள விளை நிலத்தில் முகாமிட்டது. யானைகள் இருப்பதை காண ஏராளமான மக்கள் திரண்டதால் யானைகளை விரட்டும் முயற்சியில் சிரமம் நேரிட்டது. மேலும், அதிக அளவிலான கிராமங்கள் கொண்டுள்ள பகுதி என்பதால் யானைகள் விரட்டுவது தொடர்பாக கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது, விளைநிலங்களில் காவலுக்கு செல்லக்கூடாது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டு கிராம மக்கள் உதவியுடன் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது யானைகள் பொதுமக்களை நோக்கி ஆக்ரோஷமாக விரட்டும் சம்பவமும் நடைபெற்று வருவதால் மிகுந்த கவனத்துடன் யானைகள் விரட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்து உள்ளனர். இரண்டாவது நாளாக யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.