"பள்ளி செல்லா குழந்தைகள் இல்லா மாவட்டம்" - ஆட்சியரின் புது திட்டம்

"பள்ளி செல்லா குழந்தைகள் இல்லா மாவட்டம்" - ஆட்சியரின் புது திட்டம்

அனைவருக்கும் கல்வி

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி செல்லாமல் இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு சேர்த்து, பள்ளி செல்லா குழந்தைகள் இல்லா மாவட்டம் என்ற இலக்கை அடைய அனைத்து துறைகளும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி அறிவுறுத்தியுள்ளார்.

ஒருங்கிணைப்பு கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்திட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்து பள்ளிக் கல்வி மேற்பார்வையாளர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆட்சியர் அறிவுறுத்தல்

இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் காயத்ரி; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 2022 -2023 ஆம் ஆண்டுக்கான 6 முதல் 18 வயதுடைய நீண்ட நாள் பள்ளிக்கு வராத, பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளை கண்டறியும் கள ஆய்வுப் பணி டிசம்பர் 19ஆம் தேதி முதல் ஜனவரி 11ஆம் தேதி வரை அனைத்து பகுதிகளிலும் குடியிருப்பு வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த கணக்கெடுப்பு பணியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் தீவிரமாக ஈடுபட்டு 100 சதவீத இலக்கை எட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

மேலும் படிக்க | பல்கலைக்கழகமாய் வாழ்ந்திட்ட இனமானப் பேராசிரியர்..!

அனைத்து குழந்தைகளும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-இன் படி மாணவர்களின் தேவைக்கேற்ப சிறப்பு பயிற்சி மையங்களிலோ அல்லது பள்ளிகளில் நேரடியாகவோ சேர்க்கப்படுவதை அனைத்து துறை அலுவலர்களும் உறுதி செய்து திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் இல்லா மாவட்டம் என்ற இலக்கை அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.