3வது நாளாக தொடர்ந்த சேவிலியர்களின் காத்திருப்பு போராட்டம்...

சேலம் அரசு பொது மருத்துவமனை முன்பாக நூற்றுக்கு மேற்பட்ட செவிலியர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காவல் துறையினர் பாதுகாப்பு அதிகளவில் போடப்பட்டுள்ளது.

3வது நாளாக தொடர்ந்த சேவிலியர்களின் காத்திருப்பு போராட்டம்...

தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாக மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட அவர்களுக்கு, ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் பணி நீட்டிப்பு செய்யும் ஆணை வழங்கப்பட்டது.

இந்நிலையில், எம் ஆர் பி மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,472 செவிலியர்களுக்கு கடந்த 31 ஆம் தேதியுடன் பணிநீடிப்பு ஒப்பந்தம் முடிந்த நிலையில், மீண்டும் நீடிப்பு செய்யப்படவில்லை. அவர்களை பணியில் இருந்து விடுவிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது...மாறாக இதை செய்வோம்...அமைச்சர் சொன்னது என்ன?

அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கிட வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரை களையாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமணமண்டபத்தில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று மூன்றாவது நாளாக சேலம் அரசு பொது மருத்துவமனையின் முன்பாக சாலையில் அமர்ந்து, செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அனைத்து செவிலியர்களும் கண்களுக்கு கருப்புதுணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தால் சேலம் அரசு மருத்துவமனையின் அருகே அதிக அளவில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செவிலியர்களின் போராட்டத்திற்கு ஏற்கனவே அதிமுக, பாமக, பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இன்று நாம் தமிழர் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | செவிலியர்களுக்கு அதிர்ச்சியளித்த தமிழக அரசு...கண்டனம் தெரிவிக்கும் ஈபிஎஸ்....!