சூரியனை நோக்கி பாயும் ஆதித்யா எல்-1; நேரடி காட்சிகளை காண ஏற்பாடு!

சூரியனை நோக்கி பாயும் ஆதித்யா எல்-1; நேரடி காட்சிகளை காண ஏற்பாடு!

இந்தியாவிலிருந்து நாளை விண்ணுக்கு பாய்கிறது ஆதித்யா L-1 செயற்கைக்கோள். நாளை விண்ணில் செல்லக்கூடிய காட்சிகளை மக்கள் நேரில் கண்டு களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இலவச அனுமதியையும் வழங்கி இருக்கிறது கொடைக்கானல் வான் இயற்பியல்  ஆராய்ச்சி நிலையம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகில் முதல் நாடாக நிலவில் உள்ள தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-3 விண்கலம் அனுப்பப்பட்டு வெற்றிகரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக முதல்முறையாக இந்தியாவில் இருந்து ஆதித்யா L-1 என்ற விண்கலம் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது.

அதாவது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள் சூரியனில் இருந்து வெளிவரக்கூடிய கதிர்கள் மற்றும் சூரியனின் வெளிப்புற கரோனா குறித்தும் சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் இடைவெளி இன்றி தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. அங்கிருந்து பூமிக்கு செயற்கைக்கோளின் பதிவு செய்யக்கூடிய படங்கள் அதிவேகமாக அனுப்பி வைக்கப்படும் எனவும் அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் படங்களை வைத்து பல கேள்விகளுக்கு பதில்கள் மற்றும் ஆராய்ச்சிகள் தொடரப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஆய்வின் மூலம் பிரபஞ்சம் தோன்றியது எப்படி உள்ளிட்ட பல்வேறு அரிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இருக்கும் எனவும் நொடிக்கு நான்கு புகைப்படங்கள் வரை பூமிக்கு இந்த செயற்கைக்கோளிலிருந்து அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதித்யா செயற்கைக்கோளிலிருந்து வரக்கூடிய படங்கள் மற்றும் தகவல்களை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளும் நடத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இதுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோளை விட ஆதித்யா செயற்கைக்கோள் அதிக தரவுகளை கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. நாளை விண்ணில் செலுத்தப்படக்கூடிய ஆதித்யா எல்-1 காட்சிகளை பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக சிறப்பு ஏற்பாடுகள் கொடைக்கானல் வானியல் இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் செய்யப்படுகிறது. மேலும் இதற்காக அனுமதியும் இலவசமாக வழங்கி உள்ளது கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையம்.

இதையும் படிக்க: நடிகை விஜயலட்சுமி நீதிமன்றத்தில் வாக்குமூலம்; சீமான் கைது செய்யப்படுவாரா?