"அகில இந்திய இடம் தமிழ்நாடு கல்லூரிகளில் கிடைத்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்" மருத்துவ கல்வி இயக்குநர் அறிவுரை!

"அகில இந்திய இடம் தமிழ்நாடு கல்லூரிகளில் கிடைத்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்" மருத்துவ கல்வி இயக்குநர் அறிவுரை!

மருத்துவ கல்வி கலந்தாய்வில் அகில இந்திய இடம் தமிழ்நாடு கல்லூரிகளில் கிடைத்தால் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள் என மருத்துவ கல்வி இயக்குநர் சாந்தி மலர் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறப்பு மற்றும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு நேரடி கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், மருத்துவ கல்வி இயக்குனர் சாந்தி மலர் மருத்துவ சேர்க்கை குழு செயல்பாடு குறித்து நேரில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், "மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் சார்பில் சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான நேரடி கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது.

விளையாட்டு பிரிவு மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவுக்கும் கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. 25,856 பேர் பொது பிரிவுக்கும், 13,176 பேர் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 36 அரசு கல்லூரிகள், 21 சுய நிதி கல்லூரிகள் 4 தனியார் கல்லூரிகள் உள்ளன. 15% அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீடு தவிர மற்றவைக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்த ஆண்டு 223 இடங்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் 93 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர் அவர்களில் 80 பேர் தான் தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை குறைவான அளவு இருப்பதற்கு அவர்கள் வேறு துறையில் விருப்பம் இருப்பது கூட காரணமாக இருக்கலாம். தகுதி பெற்றிருக்கக் கூடிய 80 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் மருத்துவ இடம் கட்டாயம் கிடைக்கும்" என தெரிவித்தார்

தமிழகத்தில் முதல் சுற்று கலந்தாய்வு முடிவுகள் 3 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன அதே நேரத்தில் அகில இந்திய கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் 4 ஆம் தேதிக்குள் சேர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய கலந்தாய்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர சிரமம் ஏற்படுமா? என செய்தியளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  "அகில இந்திய இடம் தமிழ்நாடு கல்லூரிகளில் கிடைத்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தான் நாங்கள் அறிவுறுத்தி வருகிறோம். அரசு மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் நல்ல பயிற்சி தான் கொடுக்கப்படுகிறது.  மத்திய இடத்தை பொறுத்தவரை 29 இறுதி நாள் என தெரிவித்து உள்ளனர். நாம் 31 ஆம் தேதி வரை இறுதி தேதி அளித்துள்ளோம், எனவே இரண்டு நாட்களில் யோசித்து முடிவு செய்யலாம். அகில இந்திய ஒதுக்கீடானாலும் சரி, மாநில அளவிலான ஒதுக்கீடு என்றாலும் சரி கிடைத்த கல்லூரியில் சிறப்பாக பயின்று நல்ல மருத்துவராக வர வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிக்க:உண்டியல் பணத்தை எடுக்க அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு!