தமிழக அரசிடம் சிவாஜி சிலையைத் திறக்க வேண்டுகோள் விடுத்த நடிகர் பிரபு

தமிழக அரசிடம் சிவாஜி சிலையைத் திறக்க வேண்டுகோள் விடுத்த நடிகர் பிரபு

திருச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு திறக்கப்படாமல் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை திறக்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேருவிடம் நடிகர் பிரபு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

திருச்சியில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை... என்ற தலைப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்படக் கண்காட்சியை திரைப்பட நடிகர் பிரபு தொடங்கி வைத்தார். திருச்சி தூய வளனார் பள்ளி மைதானத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையிலான இந்த கண்காட்சியை தி.மு.க முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடிகர் பிரபு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க | இளையராஜாவை மீண்டும் முகநூலில் விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்

கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எனக்கு சிறு வயதிலிருந்து பழக்கம் உண்டு. அவர் கடினமாக உழைக்கக்கூடியவர். இன்று அவர் முதல்வர் பொறுப்புக்கு வந்திருப்பதற்கு அவரது கடின உழைப்பு ‌விடாமுயற்சி தான் காரணம். தி.மு.கவின் உறுப்பினராக, இளைஞரணிச் செயலாளராக, மேயராக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக இருக்கிறார். இதற்கெல்லாம் அவரது உழைப்பு தான் காரணம். அவர் மக்களுக்காக எவ்வளவு இறங்கி வேலை செய்து வருகிறார் என்பதை இந்த புகைப்பட கண்காட்சி மூலம் நாம் அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ள முடியும்.

திருச்சி எனக்கு மிகவும் நெருக்கமான ஊர். கருணாநிதி, சிவாஜி, அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்டோர் சிறு‌ வயதில் திருச்சியில் ஒன்றாக வளர்ந்தவர்கள். ஷெரிஃப் என்கிற ஒரு மாட்டு வண்டிக்காரர் திருச்சியில் இருந்தார். அவரின் மாட்டு வண்டியில் நாங்கள் திருச்சியையே சுற்றி வந்துள்ளோம்.

திருச்சி பாலக்கரையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் சிவாஜி கணேசனின் சிலையை தி.மு.க அரசு திறக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதை வேண்டுகோளாகவும் முன் வைக்கிறேன். தி.மு.கவில் இருப்பவர்கள் கருணாநிதியின் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளார்களோ அதே அளவு சிவாஜி கணேசன் மீதும் பிரியம் வைத்துள்ளார்கள். விரைவில் திருச்சியில் சிவாஜியின் திருவுருவ சிலை திறக்கப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று தெரிவித்தார்.