"ஆளுமை மிக்க யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்" நடிகர் விஜய் பற்றி பா.விஜய் கருத்து...!!

"ஆளுமை மிக்க யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்" நடிகர் விஜய் பற்றி பா.விஜய் கருத்து...!!

மக்கள் ஆளுமை மிக்க யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து பாடல் ஆசிரியர் பா.விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரபல பாடல் ஆசிரியர்

நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது, வேலு பிலிம்ஸ் ஐசரி கணேசன் தயாரிப்பில் புது படம் ஒன்றை இயக்க உள்ளேன். அந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் ஆகியவற்றை நானே ஏற்று செய்ய உள்ளேன். இதில் இரண்டு பிரபல கதாநாயகர்கள் நடிக்க உள்ளார்கள். இப்படத்திற்கான அறிவிப்பு சில தினங்களில்  வெளிவரும். இதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தேன் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், "திரை உலகில் மிகவும் முக்கியமானவரான மனோபாலா உயிரிழந்துள்ளார். அவர்  எல்லோரிடமும் அண்ணன் தம்பி போல மனம் விட்டு பழகக்கூடிய ஒரு நபர். அற்புதமான கலைஞர். இந்த இறை சன்னதியில் இருந்து சொல்கிறேன் அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்" என தெரிவித்தார்.

மேலும் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "அரசியல் என்பது சிறந்த திறந்த வெளி பல்கலைக்கழகம். அதில் மக்களுடைய செல்வாக்கு இருக்கக்கூடிய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்" எனக் கூறியுள்ளார்.

மேலும், "பொன்னியின் செல்வன் திரைப்படம் எழுத்தாளர்களுக்கு கிடைக்கக்கூடிய கௌரவப் படம். நான் இயக்குனராக கதையில் முழு கவனம் செலுத்தியதால் பாடல்கள் எழுதுவதை குறைத்துக் கொண்டேன். இந்தியன் 2 படத்தில் மிக முக்கியமான பாடல் ஒன்றை எழுதியுள்ளேன். மேலும் யுவன்சங்கர்ராஜா இசையில் மிக முக்கியமான பாடல்களை எழுதியுள்ளேன். தமிழ், இலக்கியம், ரீதியாக கலைஞருடன் நெருக்கமாக இருந்தேனே தவிர அரசியல் ரீதியாக இல்லை" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க:பிக் பாஸில் அசிம் போலியாக வெற்றி பெற்றதாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்...!!