லியோ படத்திற்கு U/A சான்றிதழ் : தணிக்கை குழு மீது புகார்..!

லியோ படத்திற்கு  U/A  சான்றிதழ் :   தணிக்கை குழு மீது புகார்..!

ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றிருந்தும் நடிகர் விஜய் நடித்த லியோ படத்திற்கு தணிக்கைக் குழு லஞ்சம் பெற்றுக் கொண்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாக, இந்து மக்கள் கழக மாநில தலைவர் செல்வகுமார்  குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் தணிக்கை குழு வாரியத்தில் இந்து மக்கள் கழக சார்பில், நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் அவதூறு வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாகவும்,  இந்த திரைப்படத்திற்கு U/A சான்றிதழை தணிக்கை குழு வாரிய தலைவர் பாலமுரளி பணம் பெற்றுக் கொண்டு இக்காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் மத்திய தணிக்கை குழு ஆணையத்தில் புகார் மனு அளித்தனர்.

புகார் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய, இந்து மக்கள் கழக மாநில தலைவர் செல்வகுமார் கூறியதாவது;- 

“விரைவில் வெளியாக உள்ள லியோ படத்தில் வெளியான ஒரு பாடலுக்கு எதிராக தணிக்கை குழு வாரியத்தில் புகார் மனு அளித்துள்ள நிலையில்,.. அந்தப் புகாரின் அடிப்படையில் சமூகத்திற்கு எதிராகவும், சமூக சீர்கேட்டை விளைவிக்கக்கூடிய வகையிலான வார்த்தைகளும் வராது எனவும் தணிக்கை குழு வாரிய தலைவர் பாலமுரளி தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் நாங்களும் ஏற்று கொண்டோம்.

அதை தொடர்ந்து லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில்,  அந்த காட்சிகளில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. மேலும், பெண்களை இழிவு படுத்தும் வார்த்தைகளும் அக்காட்சிகளில் அமைந்துள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தோம். அதனைத் தொடர்ந்து, இன்று முறையாக சென்னை சாஸ்திரி பவனில் தணிக்கை குழு வாரியத்தில் புகார் அளித்துள்ளோம்.

லியோ படத்தில் ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது, ஒரு படத்தை ஆய்வு செய்யாமல் எப்படி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  அவதூறான வார்த்தைகள் ரத்தம் சொட்டும் காட்சிகளுக்கு U/A சான்றிதழ் வழங்கக்கூடாது என்பது தணிக்கை குழு வாரியத்தில் சட்டமே உள்ளது.

ஆனால் தணிக்கை குழு வாரிய தலைவர் பாலமுரளி பணத்தைப் பெற்றுக் கொண்டு இக்காட்சிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளார்   என்று புகார் அளிக்க தபால் பிரிவில் கொடுத்த நிலையில்,.. எங்கள் புகார் மனுவை வாங்க மறுத்த அவர்கள் காட்சியை  நீக்க முடியாது என்று கூறி விட்டனர். அதற்குப் பின்னர் தான் எங்கள் மனுவை பெற்றுக் கொண்டனர்.

புகாரின் அடிப்படையில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவிட்டால் அடுத்தகட்டமாக லியோ படத்திற்கு எதிராகவும், பணத்தைப் பெற்றுக் கொண்டு காட்சிக்கு அனுமதி அளித்த தணிகை குழு தலைவர் பாலமுரளி மீதும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு தொடர்வோம் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிக்க   | "பட்டாசு விபத்தில்லா மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்படும்" - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்!