டெல்லியில் 3 நாட்களுக்கு  வாகன தடை... உச்சநீதிமன்றம் யோசனை... 

டெல்லியில் காற்று மாசுவை குறைக்க 3 நாட்கள் ஏன் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு யோசனை கூறியுள்ளது. 

டெல்லியில் 3 நாட்களுக்கு  வாகன தடை... உச்சநீதிமன்றம் யோசனை... 

டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி 17 வயது மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

முன்னதாக நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் டெல்லி அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில், காற்றுமாசுவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த தயாராக இருப்பதாக டெல்லி அரசு குறிப்பிட்டிருந்தது.

மேலும் காற்று மாசு அதிகரிப்புக்கு பயிர் கழிவு எரிப்பு முக்கிய காரணம் எனவும் குறிப்பிடப்பட்டது. டெல்லியில் ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட்டால், அதனை என்சிஆர் மண்டலங்களிலும் அமல்படுத்துவது சிறந்தது எனவும் கூறப்பட்டது.

ஆனால், திறந்தவெளியில் பயிர்கழிவுகளை எரிப்பதால், 10 சதவீதம் மட்டுமே காற்று மாசு ஏற்படுவதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் கூறப்பட்டது. தேவைப்பட்டால் ஒட்டை - இரட்டை பட இலக்க எண் வாகன போக்குவரத்தினை அமல்படுத்துவது, லாரிகளுக்கு தற்காலிக தடை,  ஊரடங்கு நடைமுறை அமல்படுத்துவது உள்ளிட்ட 3 பரிந்துரைகளை மத்திய அரசு முன்வைத்தது. 

அதைதொடர்ந்து பேசிய நீதிபதிகள். பயிர்கழிவுகள் எரிப்பை தவிர்த்து, போக்குவரத்து, தொழிற்சாலைகள், வாகன நெரிசல் ஆகியனவும் காற்று மாசு அளவை அதிகரிக்க செய்வதாக சுட்டிக்காட்டினர். டெல்லியில் 3 நாட்களுக்கு ஏன் வாகன போக்குவரத்தினை தடை செய்ய கூடாது எனவும் அப்போது நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.

இந்தநிலையில், மாசு அளவை அதிகரிக்க செய்யும் தொழிற்சாலைகள் கட்டுப்படுத்துவது எப்படி, எந்த மாதிரியான வாகனங்கள் சாலையில் செல்ல அனுமதிக்கலாம், எந்தந்த அனல்மின் நிலையங்கள் செயல்பட அனுமதிக்கலாம் என்பதன் விரிவான விளக்கத்தை நாளை மாலைக்குள் இரு அரசுகளும் தெரிவிக்க உத்தரவிட்டு, நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.