சீனா பாகிஸ்தான் சிபிஇசி திட்டம்-இந்தியா எச்சரிக்கை!!!

சீனா பாகிஸ்தான் சிபிஇசி திட்டம்-இந்தியா எச்சரிக்கை!!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான சாலை இணைப்புத் திட்டத்தில் சேர பிற நாடுகளுக்கு சீனா மற்றும் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளன.  இந்தியா இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சீனா–பாகிஸ்தான் பொருளாதார சாலை திட்டம்:

சீனா–பாகிஸ்தான் பொருளாதார சாலை திட்டம் சீனா பாகிஸ்தான் நாடுகளின் ஒருங்கிணைந்த திட்டமாகும்.  இத்திட்டம் 2013 இல் தொடங்கப்பட்டது.  இத்திட்டம் சீனாவின் வடமேற்கு பகுதியான  ஜின்ஜியாங் உய்குர்-ல் உள்ள கஷ்கருடன் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை இணைக்கும் ஒரு பாதையாகும். 

முதலில் 4600 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட திட்டங்களின் மதிப்பு 2017 இல் 6200 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.

சிபிஇசி எனவும் வடக்கு-தெற்கு பொருளாதார பாதை எனவும் இத்திட்டம் அழைக்கப்படுகிறது. இது பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய பொருளாதார பாதையாகும்.

இப்பொருளாதார பாதை பாகிஸ்தானின் உள் கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதுடன் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்குமான பொருளாதார உறவை பலப்படுத்தும் என நம்பப்படுகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சிஇபிசி அமைக்கப்படுவதால் சீனாவுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

பிற நாடுகளுக்கு அழைப்பு:

கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிபிஇசி-ன் மூன்றாம் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.  அதில் சிபிஇசி-ஐ தொடர்ந்து செயல்படுத்துவது மற்றும் அதன் விரிவாக்கம் குறித்து இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்தனர்.

"பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்காக" பல பில்லியன் டாலர் மதிப்பிலான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் (CPEC)சேர விரும்பும் எந்தவொரு மூன்றாவது நாட்டையும் வரவேற்க பாகிஸ்தானும் சீனாவும் தயாராக உள்ளன என அறிவித்துள்ளன.

இந்தியா கண்டனம்:

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின்  கீழான இத்தகைய நடவடிக்கைகள் இயல்பிலேயே சட்டவிரோதமானது.  அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார். இதற்கு சரியான நடவடிக்கையை இந்தியா எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள சிபிஇசி திட்டங்களை புது தில்லி தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

அரிந்தம் பாக்சி:

"சிபிஇசி  திட்டங்களில் முன்மொழியப்பட்ட மூன்றாம் நாடுகளின் பங்கேற்பை ஊக்குவிப்பது குறித்த அறிக்கைகளை நாங்கள் பார்த்தோம். எந்தவொரு தரப்பினரின் அத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை நேரடியாக மீறும்" என்று திரு.பாக்சி கூறினார்.

"பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதியில் நடைமுறைப்படுத்தவுள்ள  சிபிஇசி என்று அழைக்கப்படும் திட்டங்களை இந்தியா உறுதியாகவும், தொடர்ச்சியாகவும் எதிர்க்கிறது," என்றும் அவர் கூறினார்.